Published : 28 Mar 2014 09:20 AM
Last Updated : 28 Mar 2014 09:20 AM
போர்முனையல்லாத, அமைதிப் பகுதிகளில் வசிக்கும் ராணுவத்தின் முப்படை வீரர்களும் இப்போதைய மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்களிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி தந்திருப்பது வரவேற்கத் தக்க தீர்ப்பு. நீதிபதிகள் ஆர்.எம். லோதா, குரியன் ஜோசப் அடங்கிய ‘பெஞ்ச்’ இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது.
ராணுவ வீரர்கள் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி வசித்திருந்தால் மட்டுமே அவர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் என்ற நிபந்தனையைத் தேர்தல் ஆணையம் விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களைத் தவிர, பிற பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு இந்த வாய்ப்பைத் தரலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவ வீரர்கள் பெருமளவில் இருப்பதால், அவர்கள் உள்ளூர் தொகுதிகளில் வாக்களித்தால், தேர்தல் முடிவுகள் உள்ளூர் மக்களின் உண்மையான விருப்பத்தை உணர்த்துவதாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு.
வாக்களிக்க அனுமதிப்பதாலேயே அரசியல் சார்பு வந்துவிடும் என்றால், மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்க வேண்டும். 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20(8) பிரிவின்படி, ராணுவ வீரர்கள் தபால் வாக்குகள், ‘பதிலி’ வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கலாம். ராணுவ வீரர்கள் தங்களுடைய சொந்த ஊரில் போட்டியிடும் வேட்பாளருக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் வாக்களிப்பது ‘பதிலி’ வாக்களிப்பு முறை.
தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி உண்டு. ஆனால், இதில் எல்லோருமே வாக்களித்துவிட முடிவதில்லை. எனவேதான், நேரடியாகவே அவரவர் பணி செய்யும் இடங்களிலேயே தனி வாக்குச்சாவடி மூலம் வாக்களிக்க உரிமை வேண்டும் என்று கோரப்பட்டுவந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பே 225 மக்களவைத் தொகுதிகளிலும் பூர்வாங்கப் பணிகள் முடிந்துவிட்டதால், எஞ்சியுள்ள தொகுதிகளில்தான் ராணுவ வீரர்களால் வாக்களிக்க முடியும். இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் ராணுவ வீரர்கள் வாக்களிப்பார்கள்.
இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. ராணுவ வீரர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காகவாவது அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளிலும் நல்வாழ்விலும் அக்கறை செலுத்த அரசியல் கட்சிகள் முயற்சி செய்யும். “ஒரே மாதிரியான பதவியில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்” என்ற சமீபத்திய முடிவு இதற்கு நல்ல உதாரணம்.
இரண்டாவது உலகப் போர் மும்முரமாக நடந்தபோதுகூட பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். எனவே, இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்த உரிமை இனியும் மறுக்கப்படுவதில் அர்த்தமே இல்லை. உயிரைத் துச்சமாக மதித்து நாட்டைக் காக்கும் பணிகளைச் செய்யும் அவர்களுக்கு, நாட்டை வழிநடத்தும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் பங்குகொடுப்பதில் என்ன தவறு?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT