Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

இது முன்னோட்டமா?

இந்த நாட்டின் அடித்தளம் எதுவோ, அந்தப் பன்முகத்தன்மைக்கு ஆதார சுருதியான சகிப்புத்தன்மையை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தியவியல் அறிஞர் வெண்டி டோனிகரின் ‘த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி' புத்தகத்தை வெளியிட்ட 'பெங்குவின் புக்ஸ்', இந்தியாவிலுள்ள புத்தகக் கடைகளிலிருந்து புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவுசெய்திருக்கிறது. மேலும், அந்தப் புத்தகத்தின் பிரதிகளை அழித்துவிடவும் முடிவெடுத்திருக்கிறது. இதற்குக் காரணம், இந்திய அரசின் உத்தரவோ நீதிமன்ற ஆணைகளோ அல்ல; ஷிக்‌ஷா பச்சாவ் அந்தோலன் என்ற இந்து அடிப்படைவாதக் குழுவின் மிரட்டலே காரணம். இதுபோன்ற குழுக்கள் மிரட்டல் விடுப்பது புதிதல்ல என்றாலும், பாரம்பரியம் மிக்க பெங்குவின் நிறுவனம் சரணடைந்த விதம் சுதந்திரச் சிந்தனையாளர்கள் மத்தியில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் ருஷ்டியின் 'த சாட்டானிக் வெர்ஸஸ்' நாவல் வந்தபோது, வரலாறு காணாத எதிர்ப்பைச் சந்தித்த நிறுவனம்தான் பெங்குவின். அப்படிப்பட்ட நிறுவனமே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதைச் சாதாரணமான விஷயமாக யாராலும் பார்க்க முடியவில்லை.

வெண்டி டோனிகர் பிரச்சினை தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பெங்குவின் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், “தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. பாசிச சக்திகள் பிரச்சாரத்தில்தான் இருக்கிறார்கள், இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. நீங்கள் அதற்குள் அடிபணிந்துவிட்டீர்களே?” என்றும் “இனிமேல் என்ன செய்ய வேண்டும்? இந்துத்துவாவுக்கு ஆதரவான புத்தகங்களை மட்டுமே எழுத வேண்டுமா?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வெண்டி டோனிகர் இந்து மதம் தொடர்பாக முக்கியமான பல நூல்களை எழுதியவர். ரிக் வேதத்திலிருந்து 108 பாடல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த அவருடைய புத்தகம் மிகவும் முக்கியமானது. வெண்டி டோனிகர் போன்ற இந்தியவியல் அறிஞர்கள் இந்து மதத்துக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்று அடிப்படைவாதக் கும்பல்களுக்குத் தெரியாது. உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கவும் மாட்டார்கள். ஆரோக்கியமான மாற்றுக் கருத்துகளை வைப்பவர்களைக் குறிவைத்துத் தாக்குவதையும் தங்கள் பார்வையை ஒட்டியிருப்பவை அனுமதிக்கப்படுவதையும் மட்டுமே எண்ணமாகக் கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் அடைந்த இந்த வெற்றி மேலும் பல வெற்றிகளின் அடித்தளமாக ஆகிவிடக்கூடும் என்ற அச்சத்தையே இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்குச் சில நாட்கள் முன்னர்தான் பத்திரிகையாளர் சகரிகா கோஷ், “இனி மோடிக்கு எதிராக எதுவுமே எழுதக் கூடாது” என்று மிரட்டப்பட்டிருக்கிறார். காரணம், ‘மோடியின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை முடக்குகிறார்கள்’ என்று தன்னுடைய ‘ட்விட்டர்' பக்கத்தில் அவர் எழுதியது. அடுத்த சில நாட்களில், சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துக்கு உரையாற்ற வந்த டீஸ்டா செடல்வாட்டுக்கு எதிராக மாணவர்கள் கூட்டம் ஒன்று கோஷம் எழுப்பிக் கூச்சலிட்டிருக்கிறது. காரணம், மோடிக்கு எதிராக அவர் முன்வைத்த கருத்துகள்.

எதை நோக்கி நாம் செல்கிறோம்?​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x