Published : 14 Oct 2014 09:34 AM
Last Updated : 14 Oct 2014 09:34 AM
கிராமப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமல்படுத்திவந்த திட்டம்தான் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’. ஒரு சில குறைகளைக் கொண்டிருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த திட்டம்தான் அது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றதும் இந்தத் திட்டத்தை ஆய்வுசெய்து உரிய திருத்தங்களைச் செய்வோம் என்று கூறினார். இந்தத் திட்டத்தில் தொழிலாளர்கள் சரியாக வேலை பார்ப்பதில்லை; தொழிலாளர்களுக்கான தின ஊதியத்தில் அதிகாரிகள் சிறிதளவு எடுத்துக்கொண்டு எஞ்சியதை மட்டுமே தருகிறார்கள்; அதிக அளவு ஆட்கள் வேலை செய்ததாகக் கணக்கு காட்டப்படுகிறது; நிரந்தரச் சொத்து உருவாக்கப்படுவதில்லை என்றெல்லாம் புகார்கள் கூறப்பட்டன.
விவசாயம் சார்ந்த பணிகளுக்கு இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவோம் என்று மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னால் பாரதிய ஜனதா தலைவர்கள் கூறினார்கள். ஆனால் இப்போதோ இந்த திட்டத்தைக் கைகழுவும் போக்கே தென்படுகிறது.
இதன் முதல் படியாக, இதற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. 2010-11-ல் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கியது ரூ.40,100 கோடி. 2013-14-ல் ஒதுக்கியிருப்பது ரூ. 33,000 கோடி. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் வேலைகளில் தொழிலாளர்களின் ஊதியப் பங்கு 60% ஆகவும் கருவிகள், இயந்திரங்களுக்கான பங்கு 40% ஆகவும் இருக்க வேண்டும் என்று ஐமுகூ அரசு நிர்ணயித்திருந்தது. ஆனால், பாஜக அரசோ தற்போது தொழிலாளர்களுக்கான ஊதியப் பங்கை 51% ஆகவும் கருவிகள், இயந்திரங்களுக்கான பங்கை 49% ஆகவும் மாற்றியமைப்பதாக அறிவித்திருக்கிறது.
நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என்றும், ஆண்டு முழுவதும் இந்தத் திட்டப் பணிகள் நடைபெறும் என்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்திருந்தது. இப்போது இந்தத் திட்டத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்த பாஜக கூட்டணி அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்கள் என்பதை எந்த அடிப்படையில் தீர்வு செய்வது? விவசாய வளர்ச்சி குறைவு, கல்வியறிவு பெற்ற மகளிர் எண்ணிக்கைக் குறைவு, மின்சார இணைப்பு இல்லாத வீடுகள் அதிகம், குடிநீர் – சுகாதாரம்- வங்கிக் கணக்கு, கழிப்பறை ஆகியவை இல்லாத வீடுகள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வட்டாரங்களின் பின்தங்கிய நிலைமை நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே, உண்மையில் வளர்ச்சி பெறாத பல வட்டாரங்கள், அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துவிட்டால் வளர்ச்சி பெற்றுவிட்டதாகக் கருதப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. மேலும், வேலை கிடைக்காததால் வறுமையில் வாடுவது சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்கூட சாத்தியமே.
இந்தத் திட்டத்தை மறுபடியும் முழுவீச்சில் கொண்டுவருவது அவசியம். பெருநிறுவனங்களுக்கும், அந்நிய நேரடி முதலீட்டுக்கும் கதவைத் திறந்துவிடும் அரசு, பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு உதவக் கூடிய ஒரு திட்டத்தை முடக்க நினைப்பது ஏன்? பிரச்சினை திட்டத்தில் இல்லை, அது நடைமுறைப்படுத்தப்படும் முறையில்தான் இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT