Published : 30 Sep 2013 09:21 AM
Last Updated : 30 Sep 2013 09:21 AM
ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியின் சமீபத்திய அமைதி முயற்சிகளை நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பாணியில் இப்படிச் சொல்லலாம்: "ரூஹானி எடுத்து வைத்திருப்பது ஓர் அடி; உலக சமாதானத்துக்கோ, மாபெரும் பாய்ச்சல்."
ஐ.நா. சபையின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த ரூஹானி, ஒபாமாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தொலைபேசி உரையாடலை நடத்திவிட்டு, ஈரான் திரும்பியிருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளில் அமெரிக்க அதிபரும் ஈரான் அதிபரும் நேரடியாக நடத்தியிருக்கும் முதல் உரையாடல் இது. பதவியேற்றதிலிருந்தே ஆக்கபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார் ரூஹானி. "அணு ஆயுதங்களில் ஈரானுக்கு ஆர்வம் இல்லை; மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணு உலைகளைச் சோதனையிடலாம்; நாட்டின் வளர்ச்சிதான் ஈரானின் முன்னுரிமை"- தெளிவாக இருக்கின்றன ரூஹானியின் செய்திகள். "அணுகுண்டுகளைத் தயாரித்துவைத்திருக்கிறது; மேற்குலகுக்கு எதிராக ஈரான் எப்போது வேண்டுமானாலும் நாசகாரத் தாக்குதலை மேற்கொள்ளலாம்"என்கிற அமெரிக்காவின் துர்ப்பிரச்சாரங்களுக்கு இப்போது தன்னுடைய தொலைபேசி உரையாடல் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் .
அளப்பரிய பெட்ரோல் வளம் இருந்தும் வறுமையான சூழலிலேயே இருக்கிறது ஈரான். பல ஆண்டுகளாக எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பேரச்சத்தின் நடுவே காலம் கடத்துகின்றனர் ஈரானியர்கள். இனி, ஈரான் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளரும். போர்த் தளவாடங்களுக்காகச் செலவிடும் தொகையை வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும். எண்ணெய் உற்பத்தியை முடுக்கிவிட்டால் பொருளாதாரம் வளரும். எல்லாவற்றுக்கும் மேல் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஈரானியர்களின் அமைதி ஈரானின் அமைதி மட்டும் அல்ல.
தலைநகர் டெஹ்ரானுக்கு வந்த ரூஹானிக்கு ஒரு பெருங்கூட்டம் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்த நிலையில், இன்னொரு கூட்டம் செருப்புகளை வீசியிருக்கிறது. ஒருபுறம் "மாற்றத்தின் மறு உருவம்"வாழ்த்து கோஷம்; மறுபுறம் "துரோகி"கூப்பாடு. ஒரு சமூகத்தில் மொழி, இனம், தேசம் சார்ந்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு எதிர்ப்பு அரசியல் செய்வது எளிமையானது. அதுவும் மூன்று தசாப்தங்களாக அமெரிக்க எதிர்ப்பு உணர்வின் நடுவிலேயே வளர்ந்த ஒரு சமூகத்தில், அந்த எதிர்ப்பு உணர்வுக்கு நியாயமான காரணங்களையும் சுமந்திருக்கும் ஒரு சமூகத்தில் திடீரென ஒரு நாள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது நேரிடும் எதிர்ப்புகள் அசாதாரணமானவை. ஆனால், அமைதியை நோக்கி அடியெடுத்துவைப்பவர்கள் இப்படிப்பட்ட எதிர்ப்புகளைப் பழக்கப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். நம்மை எதிர்த்து நிற்பவர்கள் நமக்கு எதிரிகள் அல்லர்; அவர்களும் சக ஆட்டக்காரர்களே என்று நமக்குப் பின் நிற்பவர்களுக்கு உணர்த்துவதே அமைதி நடவடிக்கைகளில் பிரதானமானது. அமைதிக்கு முன் நிற்கும் பெரும் சவாலும் அதுதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT