Published : 06 Oct 2014 08:18 AM
Last Updated : 06 Oct 2014 08:18 AM

இந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி?

எதையும் ஆரவாரமாகவும் வித்தியாசமாகவும் செய்வது ஒன்றும் நமது பிரதமர் மோடிக்குப் புதிய விஷயமில்லை. காந்தியின் பிறந்த நாள் அன்று மோடி முன்னெடுத்திருக்கும் ‘தூய்மை யான இந்தியா’ என்ற கோஷமும் அப்படித்தான்.

புதுடெல்லியில் இருக்கும் துப்புரவுப் பணியாளரின் காலனி யான வால்மீகி பஸ்தியிலிருந்து இந்தத் திட்டத்தை மோடி தொடங்கியிருக்கிறார். டெல்லி வரும்போதெல்லாம் காந்தி அதிகம் தங்கிய இடங்களுள் ஒன்றுதான் வால்மீகி பஸ்தி. அங்கிருந்து தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்குவதன் மூலம், நாட்டுக்கு அரசு சொல்லும் செய்தி என்ன? நாம் நம்முடைய தூய்மைப் பணியைச் சேரிகளிலிருந்து தொடங்க வேண்டும் என்பதா?

மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் திட்ட அளவில் 2019 வரை, அதாவது காந்தியின் 150-ம் ஆண்டுவரை, ‘தூய்மையான இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து, “பொதுஇடங்களைச் சுத்தம் செய்வதற்கு அனைவரும் வாரத்தில் 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மோடி. நல்ல விஷயம்தான். ஆனால், இங்கே ஒரு நுட்பமான அரசியலை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது: எதுவெல்லாம் குப்பை?

தூய்மை, சுகாதாரம் போன்ற கருத்தாக்கங்கள் அதிகமாகப் பரவியிராத, கல்வியறிவு குறைவாகக் காணப்பட்ட காந்தியின் காலகட்டத்தோடு தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நம்முடைய காலகட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு விஷயம் நமக்குத் தெளி வாகத் தெரியும்: குப்பைகள், கழிவுகள் என்பது இன்றைய தேதியில் வெறும் சாலையோரக் குப்பைகளும் சாக்கடைகளும் மட்டுமே அல்ல.

இந்தியா முழுவதும் ரசாயனப் புகையாலும், அபாயகரமான கழிவுகளாலும் நிரம்பி வழிகிறது. ஆற்று நீர், குளத்து நீர், நிலத்தடி நீரெல்லாம் வற்றிப்போனாலும் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரும், சாக்கடைகளும் வற்றாத ஜீவநதிகளாக ஓடுகின்றன. சுற்றுச்சூழல் விதிமுறைகள் எதையும் பொருட்படுத்தாமல் இயற்கை வளங்களைச் சுரண்டியது மட்டுமல்லாமல், இந்தியாவை ரசாயனப் புகையாலும் குப்பைகளாலும் கழிவுகளாலும் குளிப்பாட்டியது யார்? நம்முடைய ஆளும் வர்க்கம் கைகட்டிப் பார்த்திருக்க, பகாசுரத் தொழில் வளர்ச்சியின் குப்பைத் தொட்டியாக இந்தியா ஆக்கப்பட்டதுதானே காரணம்?

சேரிப் பகுதிகளிலிருந்து தூய்மைப் பணியைத் தொடங்குவது ஒரு பாசாங்கு. ஒரு நகரத்தையே தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் வாழும் இடத்தை நாம் சுத்தப்படுத்தி, ஒரு தூய்மை இயக்கத்தைத் தொடங்குவது என்பது குரூரமான நகைமுரண் அல்லவா?

குஜராத், அலாங்கில் கப்பல் உடைக்கும் தொழில் நடத்துகிறோம் என்று ஒரு கடற்கரையையே ஆசியாவின் நச்சுச் சாக்கடையாக மாற்றியிருக்கிறோமே, நாம் தூய்மைப் பணியைத் தொடங்க வேண்டிய இடம் அலாங்கா, வால்மீகி பஸ்தியா? பிரதமர் அவர்களே, உண்மையில் நாம் தூய்மை இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டிய இடம் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புப் பகுதி அல்ல, பெருநிறுவனங்களின் தொழிற்சாலைகள், கனிமச் சுரங்கங்கள், பெருநகரங்களின் வணிக மையங்கள் போன்றவைதான். உங்கள் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை உயிர்ப்போடு செயல்பட அனுமதியுங்கள். அதுதான் உங்கள் கையில் இருக்கும் மகத்தான தூய்மை இயக்கம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x