Published : 29 Oct 2014 09:05 AM
Last Updated : 29 Oct 2014 09:05 AM

மீண்டும் வென்ற தில்மா ரூசெஃப்

நாட்டின் அதிபராக தில்மா ரூசெஃப், தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள், பல பிரச்சினைகளுக்கு இடையிலும் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தத் தலைவர்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகமாகிவருவது இதன் மூலம் தெரிகிறது. இதற்கான காரணம் மிகவும் எளிமையானது. நாட்டின் முன்னேற்றத்துக்காக, நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அந்தத் தலைவர்கள் செயல்படுகிறார்கள். அதேபோல், மீண்டும் அதிபர் பதவிக்கு வருவதற்கு ஏற்ப, இந்தத் தலைவர்கள் அரசியல் சட்டத்தைத் திருத்தினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பிரேசிலில் அதிபர் பதவிக்கான பூர்வாங்கச் சுற்றில் சுற்றுச்சூழல் ஆர்வலரான மரீனா சில்வாவும் களத்தில் இருந்தார். எனவே, தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று ஊகிப்பது கடினம் என்றுகூடப் பேசப்பட்டது. ஆனால், அவர் களத்தை விட்டு நீங்கிய பிறகு, பிரேசிலின் சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஆசியோ நெவிஸுக்கும், ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக மீண்டும் களமிறங்கிய தில்மா ரூசெஃப்புக்கும்தான் போட்டி என்ற நிலை உருவானது.

51% வாக்குகளைப் பெற்று தில்மா வெற்றி பெற்றிருக்கிறார். ஆசியோ நெவிஸ் 48% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். எனவே, போட்டி கடுமையாகத்தான் இருந்திருக்கிறது என்பது புரிகிறது. பிரேசிலின் வட பகுதி மக்களின் ஆதரவு தில்மாவுக்கும், தென் பகுதி மக்களின் ஆதரவு ஆசியோவுக்கும் கிடைத்திருப்பதைக் கொண்டு, நாடு கிட்டத்தட்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதை நாம் உணர முடியும். “நாட்டை ஒற்றுமையாக வழிநடத்துவேன். இதுவரை இருந்ததைவிட இன்னும் நல்ல அதிபராக இருக்க விரும்புகிறேன்” என்று தில்மா உறுதியளித்திருக்கிறார்.

பிரேசில் நாட்டின் அரசுடைமை எண்ணெய் நிறுவனங்களில் நடந்த ஊழல்கள் தொடர்பாக தில்மா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தும், தில்மாவின் கட்சிக்குச் செல்வாக்கு குறையவில்லை. தில்மா அதிபராக இருந்த காலத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் அரசுக்கு ஆதரவாக 63% பேரும், தனிப்பட்ட முறையில் அவருக்கு ஆதரவாக 79% பேரும் கருத்து தெரிவித்திருந்தனர். பிரேசில் பொருளாதாரம் இன்னும் முழு அளவில் மீட்சி அடையவில்லை. நிர்வாகத்தில் மேலும் வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதை தில்மா இப்போது உணர்ந்திருப்பார்.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அப்படியொன்றும் செல்வந்த நாடுகள் அல்ல. ஆனாலும், மக்களிடையே அமைதியும் திருப்தியும் ஏற்படும் வகையில் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு நிறையச் செலவிடுகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நடுவிலும் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதற்குக் காரணம் அதுவே.

எனினும், தேர்தல் வெற்றி ஒன்றே தலைவர்களின் செயல்பாட்டுத் திறனை முழுமையாகப் பிரதிபலிக்காது. வறுமை ஒழிப்பும், எல்லோ ருக்குமான வளர்ச்சியும்தான் ஆட்சியாளர்களின் முக்கியப் பணிகளாக இருக்க முடியும்.

வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கும் தலைவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். மக்களை விட்டு விலகாதவரை எந்தத் தலைவரையும் தோல்வி நெருங்கவே நெருங்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x