Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

புரையோடுவதற்கான அறிகுறி!

இந்தியக் கப்பல் படையில் நேரிடும் தொடர் விபத்துகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று, கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி ராஜினாமா செய்திருப்பதை எப்படிப் பார்ப்பது? ஜோஷி எனும் தனிப்பட்ட மனிதரை அணுகும்போது, தவறுகளிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வதே இன்றைய வழக்கமாகி விட்ட நம் சமூகத்தில், இன்னமும் இப்படிச் சில மனிதர்கள் உயர்ந்த விழுமியங்களோடு இருக்கிறார்கள் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால், இந்திய ராணுவத்தை அணுகும்போது புலப்படும் கோணம் அச்சமூட்டுவதாக அல்லவா இருக்கிறது?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும், நம்முடைய முப்படைகளிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் கசிந்திருக்கும் செய்திகளை நினைவுகூர்வோம். ஆயுதங்கள், தளவாடங்கள் சார்ந்து மோசமான நிலையில் நாம் இருக்கிறோம் என்கிற தகவல்கள் மட்டும் எத்தனை முறை வந்திருக்கின்றன? பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம், “வருங்காலத்தில் போர்கள் வந்தால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்” என்கிற விஷயத்தை மீண்டும் மீண்டும் எச்சரித்துக்கொண்டிருக்கின்றனர் நம் தளபதிகள்.

தரைப்படை ஆயுதங்கள், தளவாடங்கள் சார்ந்து அது பெரும் பசியில் இருக்கிறது. விமானப்படையோ 2017-க்குப் பிறகு விமானப்படை சுருங்க ஆரம்பிக்கும் என்ற எச்சரிக்கையை அது தொடர்ந்து எதிர்கொள்கிறது. விமானங்களின் ஆயுளை நீட்டிப்பதற்காக அவற்றின் பறக்கும் நேரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் நிலையில்தான் அது இருக்கிறது. கடற்படையிலோ கப்பல் துறைகள் தூர்வாரப்படாமல் மண்மேடிட்டு, கப்பல்கள் தரைதட்டும் ஆபத்துக்கு வழிவகுக்கின்றன. இந்தியக் கடற்படைக்கு இதுவரை போர்களில் ஏற்பட்ட சேதத்தைவிட ‘சிந்துரக்ஷக்' விபத்தில் ஏற்பட்ட சேதம் அதிகம். முப்படைகளுமே ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. முக்கியமாக அதிகாரிகள் பற்றாக்குறையை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் நிதியையும் ஒரு காரணமாகக் காட்டுவது நம்மவர்கள் இயல்பு. ஆனால், நிதிநிலை அறிக்கையிலோ, தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது. எனில், எங்கு பிரச்சினை?

மோசமான நிர்வாகமும் தொலைநோக்கற்ற செயல்பாடும்தான் முக்கியப் பிரச்சினைகள். ஆள் பற்றாக்குறையை எடுத்துக் கொண்டால், நவீன ராணுவத்துக்குத் தேவையான இளைஞர்களைக் கவரும் வகையில் ராணுவத்தில் வழங்கப்படும் ஊதிய விகிதமும் பணிச் சூழலும் இல்லை. ஆயுதங்கள், தளவாடங்கள் தேவையை எடுத்துக்கொண்டால், ராணுவத்துக்கான கொள்முதல்களில் சகித்துக் கொள்ளவே முடியாத தாமதம் நிலவுகிறது. தனிப்பட்ட முறையில் ஏ.கே. அந்தோனி அப்பழுக்கற்றவராக இருக்கலாம். ஆனால், இந்திய ராணுவம் சீர்திருத்தத்தைக் கோரும் ஒரு காலத்தில் அவருடைய செயல்பாடும் வேகமும் ஈடுகொடுக்கக்கூடியதாக அல்ல என்பதே உண்மை.

இந்திய வரலாற்றில், தளபதி கே.எஸ். திம்மய்யா 1959-ல் சீனாவுக்கு எதிராகப் போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய வேண்டுகோளை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் நிராகரித்தபோது, தன் பதவியை ராஜினாமாசெய்தார். அதன் விளைவை சீனப் போரில் அனுபவித்தோம். ஜோஷியின் ராஜினாமாவும் அப்படி ஓர் உதாரணமாக மாறிவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x