Published : 25 Oct 2014 08:18 AM
Last Updated : 25 Oct 2014 08:18 AM
தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கருதும் பிரதமர் நரேந்திர மோடி, ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய உழைப்பே வெல்லும்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார்.
ஏனைய அரசியல் கட்சிகள், மத்திய தொழிற்சங்கங்கள் யாரையும் ஆலோசனை கலந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
புதிய நடைமுறையின்படி தொழில் நிறுவனங்களே தங்களுடைய ஆலையில் உள்ள தொழிலாளர்கள் நிலைமை குறித்து, எளிமைப் படுத்தப்பட்ட விண்ணப்பங்களில் தகவல்களை நிரப்பி, தாங்களே ஆய்வுசெய்து அந்த அறிக்கையை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதேசமயம், தொழிற்சாலை ஆய்வாளர்கள் இனி எந்த ஆலைக்கு ஆய்வுக்குச் செல்வதாக இருந்தாலும் அதை எழுத்துபூர்வமாக முன்கூட்டியே தங்கள் அலுவலகங்களில் பதிவுசெய்ய வேண்டும். ஆலையில் ஆய்வுகளை முடித்த பிறகு, ஆய்வறிக்கையை 72 மணி நேரத்துக்குள் கணினியில் பதிவுசெய்துவிட வேண்டும். அதன் பிறகு அதில் மாறுதல்கள் எதையும் செய்ய முடியாது. அந்தப் பதிவை அந்தத் துறையின் அதிகாரிகள், ஆலையின் நிர்வாகம், தொழிலாளர்கள் தரப்பு என்று அனைவரும் பார்க்க முடியும். அரசின் இந்த முடிவைத் தொழில் துறையும் முதலாளிகளும் வரவேற்கின்றனர்; தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றனர்.
ஆய்வாளர் பணி என்பதன் இலக்கணம் என்ன? ஒரு அமைப்பில் விதிகளுக்கு உட்பட்டு எல்லோரும் இயங்குகின்றனரா என்று எப்போது வேண்டுமானாலும், பரிசோதித்துப் பார்ப்பதுதானே? இந்திய அமைப்பில் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு விதிகளை மதிக்கின்றன; இங்கே ஆய்வுகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதையெல்லாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முப்பதாண்டுகள் ஆகும் நிலையிலும், போபால் விஷவாயுக் கசிவின் அழிவுகள் இன்னும் மறக்கவிடாமல் துரத்துகிறதே... எல்லா விதிகளையும் வளைக்கும் தொழில் துறையின் பண அரசியல்தானே போபால் அழிவுக்குக் காரணம்? ஏற்கெனவே ஊழல் புற்றாகப் பரவிக் கிடக்கும் அதிகார அமைப்பில், சீர்திருத்தம் என்ற பெயரில் இன்னும் நூறு ஓட்டைகளைப் போட்டால் என்னவாகும்?
ஒரு தொழில்சாலையை நடத்த தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நிலம், மின்சாரம், தண்ணீர், மூலதனக் கடன் என எதையெல்லாம் சலுகையில் பெற முடியுமோ, அதையெல்லாம் சலுகையில் பெறுகின்றனர்; புதிய நிறுவனங்களாக இருந்தால் முதலீட்டு மானியமும் பெறுகின்றனர்; முன்னுரிமை பெற்ற ஏற்றுமதித் துறையாக இருந்தால் ஏற்றுமதி மானியமும் பெறுகின்றனர். நாடு வாரிக் கொடுக்கிறது. ஆனால், தொழில் அதிபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இப்படியெல்லாம் காட்டப்படும் சலுகையிலும், பரிவிலும் நூறில் ஒரு பங்குகூடத் தொழிலாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை. அவர்கள் வசம் மிச்சசொச்சம் இருக்கும் உரிமைகளையும் பறிக்க அரசே துணை போகும் என்றால், தொழிலாளர் நலத் துறையின் பெயரை முதலாளிகள் நலத் துறை என்று மாற்றிவிட்டு பகிரங்கமாக அதைச் செய்யட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT