Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM
இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கையை 2014-15 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்திருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. பொதுவாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை என்றாலே, அதில் வியப்பூட்டும் அறிவிப்புகளுக்கோ திட்டங் களுக்கோ சலுகைகளுக்கோ இடம் இருக்காது என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அதற்கு இந்த நிதிநிலை அறிக்கையும் விதிவிலக்கல்ல. அடுத்து வரும் அரசு பார்த்துக்கொள்ளட்டும் என்று பல முடிச்சுகளை அவிழ்க்காமலே விட்டிருக்கிறார் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
இந்த நிதிநிலை அறிக்கையின்படி, 2014-15-ல் மத்திய அரசின் திட்டச் செலவு ரூ. 5,55,322 கோடியாகவும் திட்டமில்லாச் செலவு ரூ. 12,07,892 கோடியாகவும் இருக்கும். அரசின் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.6% ஆக இருக்கும். இந்தப் பற்றாக்குறை 4.8%-ஐவிடக் குறைவாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெற்றிபெற்றிருக்கிறார். ஏற்றுமதி – இறக்குமதி இனங்களில் நடப்புக் கணக்கில் ஏற்படும் பற்றாக்குறையைக் குறைத்திருப்பதும், அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து லாப ஈவாக ரூ.14,300 கோடியைப் பெற்றிருப்பதும் அவருடைய நிர்வாகத் திறமைக்குச் சான்று. அதேசமயம், அரசின் வருவாயைப் பெருக்க முடியவில்லை என்பதால் செலவைக் கொஞ்சம் வெட்டியிருக்கும் சிதம்பரம் திட்டச் செலவுகளில் கணிசமாகக் கைவைத்திருப்பது சங்கடம் தருகிறது. பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிப்பில் தள்ளவைக்கும் முடிவு இது.
எப்படியும் அடுத்த நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பவருக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. அதிக வரி விதிப்பு இல்லாமல் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டும்; வேலைவாய்ப்பையும் வளர்ச்சியையும் அதிகரிக்க அரசின் செலவைக் கூட்ட வேண்டும்; மானியச் செலவுகளையும் தொடர வேண்டும்; அதைக் கட்டுக்குள்ளும் வைக்க வேண்டும்...
சரி, பொருளாதாரரீதியாகத் தன்னுடைய ஆட்சியின் கடைசிக் காலத்தில் தோல்வியைத் தழுவும் ஓர் அரசிடம், அதுவும் அது தாக்கல்செய்யும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அற்புதங்களை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், ‘வெகுஜனக் கவர்ச்சி அறிவிப்பு'களில்கூட அரசு வழுக்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. அரிசி மீதான விற்பனை வரி நீக்கம், அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்யும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கான ரூ. 1.15 லட்சம் கோடி ஒதுக்கீட்டைத் தவிர உருப்படியாக எதுவும் தென்படவில்லை.
பெட்ரோலியச் செலவு நாட்டுக்கும், பெட்ரோலிய மானியம் அரசுக்கும் பெருங்கேடாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் தனிநபர்ப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் உற்பத்தி வரி குறைக்கப்பட்டிருப்பது தேவையற்றது மட்டும் அல்ல; தொலைநோக்கற்றதும் ஆகும். இதே நியாயம் ராணுவத்திற்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதற்கும் பொருந்தும். ஓர் ஆறுதல், ராணுவத்தினருக்கான ஓய்வூதியப் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்தியிருப்பது.
மொத்தத்தில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க முயற்சித்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. வாலும் சிக்கவில்லை என்பதுதான் துயரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT