Published : 01 Nov 2013 08:42 AM
Last Updated : 01 Nov 2013 08:42 AM
ஆப்பிரிக்காவின் பெரிய தேசம் என்ற பெருமையையும் 25 லட்சம் உயிர்களையும் 39 ஆண்டுகள் நிம்மதியையும் இரண்டு உள்நாட்டுப் போர்களால் பறிகொடுத்த சூடான் மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வின் உச்சம் பொறுப்பற்ற அரசுக்கு எதிரான தீயாக மூளுகிறது. பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு, மின்சாரம் என எரிபொருட்களுக்கான மானியத்தை அரசு விலக்கிக்கொண்ட நிலையில், விலைவாசியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சூடானியர்கள் தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.
சூடானில், 1989-ல் இருந்து ஆட்சியில் இருக்கும் ஒமர் அல் பஷீர் அரசு எந்தத் துறையிலுமே எதையும் சாதிக்கவில்லை. எண்ணெய் வளத்திலிருந்து வந்த வருவாய் உள்நாட்டுப் போருக்கும் அர சின் ஆடம்பரங்களுக்குமே வீணடிக்கப்பட்டது. அடிப்படைக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் கல்வி, சுகாதாரம், வேளாண் துறை கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. ஒருகாலத்தில் நாட்டின் தென்பகுதி தான் சூடானின் வளர்ச்சிக்குப் பெரும் தடை என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது பஷீர் அரசு. வடக்குப் பகுதி மக்களிடத்தில் இந்தப் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நிறுவவும் செய்தது. தென் சூடான் பிரிவினைக்குப் பின் சூடானியர்களுக்கு உண்மை உரைக்கத் தொடங்கி யிருக்கிறது. நாட்டின் எண்ணெய் வளத்தில் நான்கில் மூன்று பங்கு தென் சூடானோடு போய்விட்ட நிலையில், பொருளாதாரம் சகதியில் சிக்கியிருக்கிறது. வேலையின்மையும் வறுமையும் நெருக்குகின்றன. இதுவரை எரிபொருள்கள் மானியத்தில் அளிக்கப்பட்டதால், நிலைமை யைச் சமாளித்தார்கள் மக்கள். முடியாத சூழலில் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். மூர்க்கத்தனமான அடக்குமுறைகளுக்குப் பேர்போன பஷீர் அரசால், இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; இணையதளங்கள் முடக்கப்பட்டு ஊடகங்கள் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
எல்லாவற்றையும் மீறியும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான புரட்சிக் குரல்களை எழுப்புகிறார்கள் சூடானியர்கள். ஆனால், முன்பு போல இப்போதெல்லாம் புரட்சிக் குரல்களை உற்சாகத்தோடு கேட்க முடியவில்லை. இந்தப் புரட்சிக்கு எத்தனை உயிர்கள் விலையாகும் என்று தெரியவில்லை; ஒருவேளை பஷீர் ஆட்சி அகன்றாலும், அடுத்தது எத்தகைய ஆட்சி அமையும் என்றும் தெரியவில்லை. சூடான் போராட்டக் குழுக்களில் பல இன அடிப்படைவாதக் குழுக்கள். அவை தங்களுக்குள் போரிடத் தொடங்கும். ஏற்கெனவே நிலை குலைந்த தேசத்தை மேலும் சிதைக்கவே அது வழிவகுக்கும். ஒரு தேசத்தின் ஆக்க பூர்வ அரசியல் மாற்றம் படிப்படியாக நடக்க வேண்டியது; மாற்றுச் சிந்தனை இல்லாமல் ஏற்கெனவே இருக்கும் அமைப்பை உடைக்க இறங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்கிறது. டுனீசியா விலும் எகிப்திலும் லிபியாவிலும் இன்றைக்கு அதைத்தான் பார்க்கிறோம்.
சிரியாவின் நிலைக்கே சூடானும் தள்ளப்படுமோ என்ற அச்சம் கவிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment