Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

தூரத்து நட்சத்திரம்

வானத்தைப் பார்க்கும்போது நாம் பார்க்கும் எல்லா நட்சத்திரங்களும் ஜொலிப்பதில்லை. அதனாலேயே கண்ணுக்குச் சிறியதாகத் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் சின்னதாகிவிடுவதில்லை. வெறும் பேட்டிங்கில் மட்டும் அல்லாமல், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் தன்னுடைய அணிக்குத் தேவைப்படும்போதெல்லாம் கை கொடுத்து விடைபெறும் ஜாக் காலிஸ் அப்படித்தான் தெரிகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 45 சதங்கள் அடித்திருக்கும் காலிஸ் குவித்த மொத்த ரன்கள் 13,289. சச்சின் (15,921), ரிக்கி பான்டிங் (13,378) ஆகியோருக்கு அடுத்த இடம் இது. பந்து வீச்சில் 292 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கணிசமான ஒரு பங்களிப்பு இது. 200 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார். ராகுல் திராவிட்டுக்கு (210 கேட்சுகள்) அடுத்த இடம் இது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் சளைக்கவில்லை. 325 போட்டிகளில், 17 சதங்கள், 86 அரை சதங்களுடன் 11,574 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 45.13. 273 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 129 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார்.

ஒரு ஆல்ரவுண்டர் என்ற வகையில், நம் காலத்தின் மிகச் சிறந்த வீரர் காலிஸ். கடந்த 20 ஆண்டுகளில் காலிஸ் அளவுக்கு நம்பகமான ஆல்ரவுண்டர் யாரையும் கிரிக்கெட் உலகம் பார்க்கவில்லை.

பொதுவாக, பேட்டிங், ஃபீல்டிங், பந்து வீச்சு என்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ஆல்ரவுண்டர்களை, அவர்களுடைய பேட்டிங் சராசரியிலிருந்து பந்து வீச்சு சராசரியைக் கழித்துப் பட்டியலிடுவார்கள். அந்த வகையில், டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையிலான கணக்கிடலில், மேற்கிந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸ் (23.75) சராசரிக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவர் காலிஸ் (22.59). இம்ரான் கான் (14.88), கீத் மில்லர் (14), இயான் போத்தம் (5.4), கபில்தேவ் (1.41) ஆகியோரைவிட அதிகம். அதாவது, கிரிக்கெட் இதுவரை கண்ட ஆல்ரவுண்டர்களில் சோபர்ஸுக்கு அடுத்த இடம் காலிஸுடையது.

ஒரு வீரரின் பெருமை அவருடைய தனிப்பட்ட சாதனைகளில் மட்டும் இல்லை; அணிக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறாரோ, அப்போதெல்லாம் கை கொடுப்பதிலும் இருக்கிறது. அந்த வகையில், தென்னாப்பிரிக்க அணிக்குத் தன் காலம் முழுவதும் ஆபத்பாந்தவனாக அவர் இருந்திருக்கிறார். வெற்றி தோல்வியில் நிதானம் இழக்காத நடத்தை, எதிராளிகளாலும் மதிக்கப்படும் அசாத்தியமான திறமை, எத்தகைய நெருக்கடிக்கும் கைகொடுக்கக்கூடிய பன்முக ஆற்றல், அணி உணர்வு ஆகிய குணங்கள் கொண்ட காலிஸின் ஓய்வு, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும். நீண்ட காலம் நிலைத்து விளையாடுவதற்குப் பேர் போன வீரர்களின் அடுத்தடுத்த ஓய்வுகளின் பின்னணியில், காலிஸ் ஏற்படுத்தும் வெற்றிடம் இழப்பாக மாறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x