Published : 13 Feb 2014 09:14 AM
Last Updated : 13 Feb 2014 09:14 AM
நாட்டில் உள்ள இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இந்தத் தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது. ஊனம் என்பதற்கு இந்த மசோதாவில் விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. உடல், மனம், உணர்வு, அறிவார்ந்த செயல்கள் போன்றவைரீதியாக ஏற்படும் அனைத்து வகை ஊனங்களும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. சாதாரண உடல்நிலை, மனநிலையுள்ள மற்றவர்களுடன் கலந்து பழக முடியாமலும், பணியாற்ற முடியாமலும் உள்ள சூழல்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குச் சலுகைகளைத் தர இந்த மசோதா வழிசெய்கிறது. இதுவரை ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டு அளவையும் மூன்று சதவீதத்திலிருந்து ஒன்பது சதவீதமாக இந்த மசோதா உயர்த்துகிறது. 19 விதமான ஊனங்கள் பட்டியலிடப்பட்டு அத்தகையவர்களுக்குச் சட்டரீதியாகப் பாதுகாப்பு அளிக்கிறது மசோதா. 1995-ல் இயற்றப்பட்ட சட்டத்தில், மொத்தம் ஏழு மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தன.
மூளைவளர்ச்சிக் குன்றியவர்களுக்கும் பிறருக்குச் சமமான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது இந்த மசோதா. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது ஊனமுற்றோரின் எண்ணிக்கை, ஊனத்தின் தன்மை ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைமையிலான அரசு முன்முயற்சி எடுத்தது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் விடுபட்டுப்போன இந்தப் புள்ளிவிவரம் கிடைக்க இந்த யோசனைதான் வழிசெய்திருக்கிறது.
ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் குடும்பத்திலும் உறவினர் களிலும் ஒருசிலர்தான் ஆதரவாக இருக்கின்றனர். ஊனம் காரண மாகவே படிக்க முடியாமல் பெரும்பாலானோர் படிப்பைப் பாதியில் கைவிடுகின்றனர் அல்லது உயர் கல்வி பெறாமல் தடுக்கப்படுகின்றனர். தனியார் நிறுவனங்களும் ஊனமுற்றவர்களால் மற்றவர்களுக்குச் சமமாக வேலை செய்ய முடியாது என்ற காரணத்தைக் காட்டி, வேலைக்கு எடுத்துக்கொள்ளத் தயங்கி, மறுத்துவிடுகின்றன. சுய வேலைவாய்ப்புகளும் அவர்களுக்குக் குறைவே. இந்தக் காரணங் களால் ஊனமுற்றவர்கள் அடுத்தவர்களை அண்டிதான் காலம் முழுக்க வாழ வேண்டியிருக்கிறது. இந்த மசோதா சட்டமானாலும் இவர்களுடைய வாழ்க்கை நிலை அடியோடு மாறிவிடாது என்றாலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்தக் காரணத்துக்காகவாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மோதல் போக்குகளைக் கைவிட்டு, மசோதாவை முழுமனதுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும் தாமதப்படுத்துவது சரியல்ல என்பதை எல்லாக் கட்சிகளும் உணர வேண்டும்.
சில குறைகள் இருக்கலாம், இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் திருத்தப்பட வேண்டியிருக்கலாம், புதிதாகச் சிலவற்றைச் சேர்க்க வேண்டியிருக்கலாம். எதுவாக இருந்தாலும், முதலில் மசோதாவை நிறைவேற்றிவிட்டுத் தேவைப்பட்டால் திருத்தங்களை வரும் நாடாளுமன்றக் கூட்டங்களில் கொண்டுவரலாம். இந்த மசோதாவைக் கொண்டுவந்த ஐ.மு. கூட்டணிக் கட்சிகளும் தே. ஜ. கூட்டணிக் கட்சிகளும் முற்போக்கான - மனிதநேயமுள்ள மசோதாக்களை ஆதரிக்கத் தயக்கம் காட்டாத இடதுசாரிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT