Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM
மிகுந்த தாமதம் என்றாலும், சரியான தருணத்தில் மிகச் சரியான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, நிச்சயம் அரசியல் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணி.
இந்திய அரசியல் கொஞ்சம் கொஞ்சமாகக் குற்றவாளிகளின் கூடாரமாகிவருகிறது. வழக்குகளைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. ‘வழக்குதானே போட்டுக்கொள்ளட்டும்; அது முடிவுக்கு வந்தால்தானே பிரச்சினை?’ என்ற மனோபாவம் பொதுவானதாகி விட்டது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட ஓர் அறிக்கையின் படி, 2004-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலங்களில் மட்டும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. இவர்களில் 1,187 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 2004-ல்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 128 பேர் குற்றக்கறை படிந்த உறுப்பினர்கள். 2009-ல் இந்த எண்ணிக்கை 162-ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 76 பேர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதோ, இப்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் 70 உறுப்பினர்களில் 34 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 70-க்கு 34 என்றால், 543-ல் எவ்வளவு இருக்கும் என்ற அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன, ஒவ்வொரு நாளும் வெளியாகும் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள்.
இந்த விஷயத்தில் கட்சிகளுக்குள் எந்தப் பாகுபாடும் இல்லை. பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க-வை எடுத்துக்கொண்டாலே, இரு கட்சிகளுமே சம நிலையில்தான் இருக்கின்றன. இரு கட்சிகளிலும் தலா 44 உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. இங்கே தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலும் அதே கதைதான்.
அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலுமே தலா நான்கு உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதை மட்டுமல்ல; சட்டப்பேரவை உறுப்பினர்களின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. உத்தரப் பிரதேசம், பிஹார், டெல்லி, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 30% உறுப்பினர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன. ஆக, நம் அரசியல்வாதிகளும் சரி, அரசியல் கட்சிகளும் சரி ஊழல் பின்னணியிலும் குற்றப்பின்னணியிலும் ஒருவருக்கொருவர் சளைக்க வில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
நவீன அகராதியில் அரசியல் பிழைப்போர்க்கும் அறத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் ஆகிவிட்டது. அதுவும் தார்மிகம் என்பது இன்றைய அரசியல்வாதிகள் மறந்துவிட்ட சொல். இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் கட்சிகள் வழக்கம்போல, இந்தத் தேர்தலிலும் குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கலாம்; வெற்றி பெறவும் வைக்கலாம்; ஆனால், அவர்கள் மீதான வழக்குகள் 2015-க்குள் முடிவுக்கு வரும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி பறிக்கப்படும். இந்த நல்லது நடக்கட்டும். இந்திய மக்கள் பிரதிநிதிகள் அவையிலிருந்து குற்ற நெடி ஒழியட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment