Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM
இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள்போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்.
ஆசியக் கோப்பைப் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற காரணத்துக்காக, உத்தரப் பிரதேசத்தில் பயிலும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள்மீது தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறது மீரட் காவல் துறை. கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ-யின் கீழ் பிரிவினைவாதக் குற்றச்சாட்டு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டாலும், பிரிவு 153 ஏ-யின் கீழ் வெவ்வேறு இனங்களுக்கிடையே துவேஷத்தை ஏற்படுத்த முயன்றது, பிரிவு 427-ன் கீழ் விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் இன்னும் நீடிக்கின்றன. இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் பேசியிருக்கிறார். பிரச்சினைக்கு மதப் பிரிவினைவாதச் சாயம் விழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காக, மாணவர்களை காஷ்மீருக்குத் திரும்ப அனுப்பியிருப்பதாக சுவாமி விவேகானந்தர் சுபார்தி பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. தாங்கள் எந்தப் புகாரையும் பதிவுசெய்யவில்லை என்று பல்கலைக்கழகத் தரப்பு கூறினாலும், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?
“அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பேச்சு களையும் கருத்து வெளிப்பாடுகளையும்கூடப் பிரிவினைவாதம் என்ற வரையறைக்குக் கீழே கொண்டுவந்துவிட முடியாது; வன்முறையையும் கலவரத்தையும் தூண்டிவிடும் வகையிலான நடவடிக்கைகள்மீது மட்டுமே தேசத் துரோகத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்” என்று கூறுகிறது உச்ச நீதிமன்றம். ஆனால், சாதாரண ஒரு கிரிக்கெட் போட்டி விஷயத்துக்கே தேசத் துரோகச் சட்டத்தைத் துணைக்கு அழைக்கின்றனர். இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறி யாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா? சமீபத்தில் ஜம்முவில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருந்த ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் நள்ளிரவுச் சோதனைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இப்போது காஷ்மீர் மாணவர்கள்மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகளின் மனதிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தியப் பொதுச் சமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?
இந்தச் சமயத்தில், பாகிஸ்தான் - இந்தியா இடையேயான ஒரு கிரிக்கெட் போட்டியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். சென்னையில் நடைபெற்ற பரபரப்பான அந்தப் போட்டியில் பாகிஸ் தான் வென்றது. அரங்கத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று, பாகிஸ்தானுக்குக் கரவொலி எழுப்பினர். வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரும் நெகிழ்ந்துபோயினர். விளையாட்டு என்பதன் உண்மையான நோக்கம் இதுதான். எல்லைகளைத் தாண்டி நல்லுறவை வளர்ப்பது. உண்மையான வெற்றியை அங்கீகரிப்பதுதான் விளையாட்டுக்கான அடிப்படை. உண்மையில், விளையாட்டில் தேசப் பற்றை நுழைப்பவர்கள்தான் பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT