Published : 07 Oct 2014 08:16 AM
Last Updated : 07 Oct 2014 08:16 AM

அமைதிக்கு அணு ஆயுதம் தேவையா?

அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 26-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லா தினங்களையும்போல வெறும் சம்பிரதாயமாக ஆகிவிட்ட அந்தத் தினம் குறித்துச் சில கேள்விகளை நாம் எழுப்பிக் கொள்வது அவசியமாகிறது.

அணு ஆயுதங்களின் அழிவு சாத்தியத்தை இரண்டாவது உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் நமக்குக் காட்டின. அந்த அணுகுண்டுகள் லட்சக் கணக்கானவர்களைக் கொன்றதுடன் அங்குள்ள நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் நஞ்சாக்கிவிட்டன. அடுத்தடுத்த தலை முறைகள்கூட கதிர்வீச்சால் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இப்போதும் அங்கே இரையாகிவருகின்றனர். கூடவே, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பெரும் நாசத்தையும் மறக்க முடியுமா?

அப்படியும்கூட உலக நாடுகள், குறிப்பாக வல்லரசுகளும் வல்லரசாக ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளும் பாடம் கற்க வில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்! அணு ஆயுதங்களை மேலும் மேலும் திறன் கூட்டி, உரமேற்றித் தயாரித்துக் கையிருப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே, சமாதானத் தூதர் வேடத்தையும் அவ்வப்போது அந்த நாடுகள் அணிந்துகொள்வதுதான் வேடிக்கை.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் ‘அணு ஆயுத நாடு’களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும் மேற் கண்ட ஒப்பந்தத்தால் அந்த நாடுகள் அங்கீகரிக்கப்படவில்லை. இஸ்ரேலைப் பொறுத்தவரை, தன்னிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதில் அந்த நாடு வெளிப்படையாக இல்லை.

அணு ஆயுதம் தயாரித்து வைத்துக்கொள்ளாத நாடுகளுக்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்து, சர்வதேசக் கண்காணிப்புக்கு உட்படுத்துகின்றன வல்லரசுகள். ஆனாலும், தங்களுடைய நட்பு நாடுகளுக்கு அணு ஆயுதங்களைத் தீபாவளிப் பட்டாசுகளைப் போல அவை வழங்குவதும் நடக்கிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1996-ல் கொண்டுவரப்பட்டாலும் உலகில் உள்ள எல்லா நாடுகளும் அதில் இன்னும் கையெழுத்திடவில்லை. அணுஉலைகள் வைத்திருக்கும் 44 நாடுகள் அதை வழிமொழியவில்லை.

ராணுவரீதியான ஆயுதக்குறைப்பு உடன்பாட்டின்படி (ஸ்டார்ட்) அமெரிக்காவும் ரஷ்யாவும் 1,550 அணு ஆயுதங்களை 700 ஏவுகணை களில் பொருத்தி வைத்துக்கொள்ளலாம். இதுதான் இப்போதைக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்துகொண்டிருக்கும் சட்டப்படியான, இருதரப்பு ஆயுதக்குறைப்பு உடன்படிக்கை. உலகின் பல்வேறு பகுதிகளில் அணு ஆயுதங்களே கிடையாது. அந்தப் பகுதிகள்மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க, முதலில் அணு ஆயுதங்களைத் தயாரித்த 5 நாடுகளும் மறுக்கின்றன. எப்படி இருக்கிறது நியாயம்! ‘அடுத்தவர்கள் வைத் திருக்கும் அணு ஆயுதங்கள்தான் உலக அமைதிக்கு ஆபத்தானவை, நாங்கள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களோ உலக அமைதிக்கு அவசியம்’ என்ற மனநிலையில் அணு ஆயுத நாடுகள் செயல்படுவது பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

விதிவிலக்குகளோடு அல்ல, அடியோடு அணு ஆயுதத் தடையை விதிப்பதுதான் இந்த உலகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அகற்றும். அதற்கு நாளாகலாம், ஆனால், உலக சமாதானத்துக்கு அது மிகமிக அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x