Published : 22 Apr 2014 09:03 AM
Last Updated : 22 Apr 2014 09:03 AM
ஒருவழியாக, சுடுகாடுகளுக்குக் கூரை வேயும் திட்டத்தில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது சி.பி.ஐ. நீதிமன்றம். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும் தி.மு.க-வின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி, இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட ஐந்து பேருக்குத் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு இது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல மனுமீது சென்னை உயர் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையை அடுத்தே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் சுடுகாடுகளுக்குக் கூரை வேயும் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தரமற்ற கூரைகளை அமைத்து, பண ஆதாயம் பார்த்ததாக, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசில் 1995-ல் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. மதுரை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், செல்வகணபதி குற்றமற்றவர் என்று 2011-ல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் தவறிழைத்ததாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஊழல் குற்றத்துக்காகப் பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதியாகி இருக்கிறார் செல்வகணபதி. தன்னுடைய பதவி எப்படியும் பறிக்கப்படும் என்கிற சூழலில், ஏனைய கட்சிகளின் பிரச்சாரத்தைத் தவிர்க்க தானே முந்திக்கொண்டு ராஜிநாமா செய்திருக்கிறார்.
செல்வகணபதி மீது ஊழல் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீர்ப்பைப் பார்க்கும் எவருக்கும் தோன்றும் நியாயமான கேள்வி இது: ஓர் ஊழலை நிரூபிக்க 20 ஆண்டுகள் நம் அமைப்புக்குத் தேவைப்படுகிறது. தண்டனையோ வெறும் இரண்டு ஆண்டுகள். என்ன அமைப்பு இது?
மேலும், இந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள் இருக்கின்றன. 1. தேர்தல் மேடைகளில் மாறிமாறி ஊழல் குற்றம்சாட்டிக்கொள்ளும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்த விஷயத்தில் எப்படிக் கூட்டாக மௌனம் காக்கின்றன என்பது. 2. இந்த ஊழல் விவகாரத்தை வெளிக்கொண்டுவந்த உமாசங்கர் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படியெல்லாம் இரு ஆட்சிகளிலும் மாற்றி மாற்றி பந்தாடப்பட்டு, இன்றைக்கு ஓரங்கட்டிவைக்கப்பட்டிருக்கிறார் என்பது. ஊழல் விஷயத்தில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடு இந்த விவகாரம். ஒருகாலத்தில் நேர்மையான செயல்பாடுகளுக்குப் பேர்போன தமிழக அரசியல்வாதிகள், இன்றைக்கு எவ்வளவு சீரழிந்து நிற்கின்றனர் என்பதற்குமான வெளிப்பாடும்கூட.
நாடு முழுவதும் லோக்பால் அமைப்புக்கான குரல்கள் ஓங்கி ஒலித்தபோது தமிழகத்தில் உயர்ந்த கைகள் இப்போது தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவரப்படுவதற்காக உயர வேண்டும். தமிழகத்தை ஊழல் புற்றுநோய் கொஞ்சம்கொஞ்சமாகச் செல்லரிக்கும் முன் இந்த இழிநிலையிலிருந்து அதை மீட்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT