Published : 21 Mar 2014 09:15 AM
Last Updated : 21 Mar 2014 09:15 AM

இன்னொரு வரலாற்றுத் தவறு!

மீண்டும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகிறது கிரைமியா. உக்ரைனிடமிருந்து பிரிந்து, சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்த கிரைமியா, பொதுவாக்கெடுப்பில் 96.8% ஆதரவோடு ரஷ்யாவுடன் இணையும் முடிவை எடுத்திருக்கிறது.

ஐ.நா. சபையும் சர்வதேசமும் கிரைமியாவைச் சுதந்திர நாடாக அறிவிக்கக் கோரியுள்ளதோடு, ரஷ்யக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினராக கிரைமியா குடியரசை ஏற்றுக்கொள்ளுமாறு ரஷ்யாவிடமும் அது கோரியது. ரஷ்ய நாடாளுமன்றம் இதை அங்கீகரித்தது. ரஷ்யா பின்னிருந்து இயக்கிய மாற்றங்கள்தான் இத்தனையும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி உக்ரைன் நகர்வது தடுக்க முடியாததாகிவிட்ட சூழலில், கிரைமியாவைத் தன் வசம் வைத்துக்கொள்ள சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தியது ரஷ்யா. கிரைமியாவில் உள்ள செவாஸ்தபோல் கடற்படைத் தளம் ஏற்கெனவே ரஷ்யக் கடற்படையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்நிலையில், ரஷ்யத் தரைப்படையையும் அங்கு களம் இறக்கியது ரஷ்யா. ஒருபக்கம் இப்படிப் படைகளைக் குவித்ததோடு, மறுபுறம் 1,500 கோடி யூரோ கடன் மூலம் பொருளாதாரரீதியாகவும் கிரைமியாவை அது வளைத்தது.

எனினும், இந்த மாற்றங்கள் ரஷ்யாவின் வரலாற்றுத் திணிப்பாக மட்டும் இல்லை என்பதற்கான வெளிப்பாடு கிரைமியர்களின் கொண்டாட்டங்கள்.

கிரைமியாவில் 58.32% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்கள். 24.32% பேர் உக்ரைனிய மொழி பேசுபவர்கள். செங்கிஸ்கானின் வழிவந்த தார்த்தாரியர்கள் சுமார் 12.10%. கருங்கடலின் வட கடலோரத்தில் உள்ள கிரைமியா, ராணுவரீதியாக ரஷ்யாவுக்கு வியூக முக்கியத்துவம் உள்ள ஒரு பகுதி.

பாரம்பரியமாக இந்தப் பகுதி உக்ரைனுக்கு உரியதல்ல. 1954-ல் அப்போதைய ரஷ்யத் தலைவர் நிகிடா குருஷ்சேவ் உக்ரைனுக்கு அளித்த கொடை கிரைமியா. இந்த வரலாற்றுப் பின்னணியோடு, சமகாலக் குழப்பங்களையும் கணக்கில் கொண்டு பார்த்தால், தீர்வு தெரியாத பிரச்சினையில் இது ஏற்கத் தக்க தீர்வாகவே படுகிறது. ஆனால், எதிர்பார்த்தபடி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் இந்த மாற்றங்களை நிராகரித்துள்ளன.

கிரைமியாவை ரஷ்யாவுடன் சேர்க்க முயற்சி எடுத்த ரஷ்ய நாட்டு அதிகாரிகளுக்கும் பிற பிரமுகர்களுக்கும் எதிராகப் பொருளாதார நடவடிக்கைகளை முதல் கட்டமாக அறிவித்துள்ளன அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.

வரலாறு கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பயணித்ததுபோல இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணி நாடுகளுக்கும் ரஷ்யா தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளுக்கும் இடையில் நடந்த பனிப்போர் காலம் நினைவுக்கு வருகிறது. ரஷ்யாவின் வல்லாதிக்கமே கிரைமியா பிளவுக்குக் காரணம் என்றால், சோவியத் ஒன்றியம் உடைபட்டபோது அகமகிழ்ந்த அமெரிக்கா, கொசாவோ உருவானபோது அதை வெளிப்படையாக ஆதரித்த அமெரிக்கா, யூகோஸ்லேவியா பிளவைப் பின்னிருந்து ஊக்குவித்த அமெரிக்கா இப்போது உக்ரைன் பிளவை மட்டும் எதிர்க்கக் காரணம் என்ன?

மேற்கத்திய நோக்கங்கள் உலகம் அறியாத ரகசியம் அல்ல. பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனிலோ கிரைமியாவிலோ களம் இறங்கலாம் என்கிற செய்திகள் கசிகின்றன. அப்படி நடந்தால், இன்னொரு வரலாற்று இழப்புக்கு அமெரிக்கா தயாராகிறது என்றே அர்த்தம்!​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x