Published : 13 Oct 2014 10:40 AM
Last Updated : 13 Oct 2014 10:40 AM
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி என்ற இந்தியருக்கும், பாகிஸ்தானியச் சிறுமி மலாலா யூசுஃபாய்க்கும் கிடைத்திருப்பது ஆசியர்களான நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முக்கியமாக, இரண்டு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவும் சூழலில் இந்தப் பரிசு கொஞ்சமாவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
இருவருமே குழந்தைகள் நலனுக்காக, கல்விக்காகப் பாடுபட்டு வருபவர்கள் என்பது அவர்களை ஒரு புள்ளியில் இணைக்கிறது. கைலாஷ் சத்யார்த்தி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 60 வயதாகும் சத்யார்த்தி குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்து அவர்களைக் காக்கும் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார். இதுவரை 80,000 குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்திருக்கிறார். இவருடைய இயக்கத்தில் ஏராளமான தன்னார்வத் தொண்டர்கள் சேர்ந்துள்ளனர். கைலாஷ் சத்யார்த்தியைப் போன்ற ஒருவர் இந்தியாவில் அதிகம் அறியப்படாமல் இருந்தது துரதிர்ஷ்டமே.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிங்கோரா பகுதியைச் சேர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். பெண் கல்விக்கு எதிராக தலிபான்கள் செயல்பட்டதால் அதை எதிர்த்து மலாலா குரலெழுப்பினார். அதற்காக, அக்டோபர் 09, 2012-ல் தலிபான்களால் சுடப்பட்டார். அந்தச் சம்பவத்தால் உலகமே கொதித்தெழுந்தது. இங்கிலாந்தில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுப் பின் உயிர்பிழைத்த மலாலா அந்த நாட்டிலேயே தங்கிவிட்டார். அதற்குப் பிறகு, உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் தடையில்லாமல் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துச் செயல்பட்டுவருகிறார்.
தலிபான்கள் பிடியிலிருந்து அவருடைய ஸ்வாட் பகுதி விடுபடாத நிலையில், மலாலா நாடு திரும்ப முடியாத நிலையே இன்னும் உள்ளது. இந்தச் சூழலில் மலாலாவுக்குக் கிடைத்த/ கிடைத்துக்கொண்டிருக்கும் விருதுகளின் பின்னணியில் மேற்கு நாடுகளுக்கு இருக்கும் உள்நோக்கத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் விமர்சித்துவருகின்றனர். பாகிஸ்தானின் இழிநிலையைப் படம் பிடித்துக் காட்ட மேற்கு நாடுகள் மலாலாவைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பது அவர்களின் விமர்சனம். அதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், அதற்கு அடிப்படைக் காரணம், தலிபான்களின் மூர்க்கமும் பிற்போக்குத்தனமுமே என்பதை அவர்கள் உணர வேண்டும். சிறுமி என்றும் பாராமல் சுட்டுக்கொல்ல நினைத்தவர்கள் தங்கள் தரப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. “நான் படிக்கக் கூடாது என்று சொல்ல தலிபான்கள் யார்?” என்ற மலாலாவின் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அதற்குப் பிறகு மலாலாவை விமர்சிக்கலாம்.
ஒரு வகையில் இந்த விருது இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்குமே தலைகுனிவுதான். இந்தியாவில் சிறார் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதும், மனசாட்சியின்றி இந்தியச் சமூகமும் அதை ஊக்குவிக்கிறது என்பதும் இந்த விருதின் மூலம் உலகுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. தலிபான்கள் போன்ற பிற்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்பது பாகிஸ்தானுக்கு அவமானம். இவ்விரு நாடுகளும் இப்படிப்பட்ட சமூக இழிநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதைத்தான் தங்கள் முதல் நோக்கமாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான், மேற்குலகின் உள்நோக்கத்தைக் குற்றம்சாட்டும் தார்மிகத் தகுதி நமக்கு ஏற்படும். முதலில் நம்மை சரிசெய்துகொள்வோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment