Published : 15 Oct 2014 08:35 AM
Last Updated : 15 Oct 2014 08:35 AM

தளைகள் அறுபட வேண்டும்!

பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18-ஆக இருக்க வேண்டும் என்று இப்போது இருப்பதை 21-ஆக உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, வழக்கு ஒன்றின்போது யோசனை கூறியிருக்கிறது.

திருமணம் செய்துகொள்வதற்கான பக்குவத்தை அடைய ஆணுக்கு 21 வயது தேவைப்படும்போது, பெண்ணுக்கு மட்டும் ஏன் 18 என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். நீதிபதிகளின் கேள்விக்கான காரணங்கள் எதுவாகயிருந்தாலும் அரசும் சமூகமும் அவசியம் பரிசீலிக்க வேண்டிய யோசனையே இது.

எழுத்தறிவும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் வளர்ச்சி அடைந் திருந்தாலும் நம்முடைய சமூகத்தின் அடிப்படை இன்னும் மாறவில்லை. ஒரு பெண்ணின் இலக்கு திருமணம் என்ற உணர்வுடனேயே பெற்றோர் பெண்களை வளர்க்கிறார்கள். இதனால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய ஆண் பிள்ளைகள் அளவுக்குப் பெண் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்பைத் தருவதில்லை. 18 வயதானவுடனேயே திருமணம் செய்துகொடுத்து பாரத்தை இறக்கி வைத்துவிட வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களால் பெண்களில் பலருடைய படிப்பு அரைகுறையாகவே முடிகிறது; அல்லது கல்லூரியை எட்டாமலேயே முடிந்துவிடுகிறது.

ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாரோ இல்லையோ, தற்சார்புடன் நிற்க அவருக்கு வேலை அவசியமாகிறது. ஆனால், 20 வயதுக்குள்ளேயே திருமணத்தைக் காரணம் காட்டிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால், அந்த வயதுக்குள் வேலை வாய்ப்புக்குரிய மேல்படிப்பை ஒரு பெண் எப்படி முடித்திருக்க முடியும்?

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற வேறுபாட்டின் அடிப்படையில் அல்ல - கல்வித் தகுதிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே, நல்ல வேலை ஒன்று கிடைக்க வேண்டுமானால் ஒரு பெண், ஆணுக்கு இணையாகவோ, அதிகமாகவோ கல்வித் தகுதியும் திறமையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.

திருமணத்துக்குப் பிறகு, ஒரு பெண் தனது கணவரையும் அவரது குடும்பத்தையும் சார்ந்தே இருக்க வேண்டிய சூழல்தான் இங்கு நிலவுகிறது. பல்வேறு சமயங்களில் அந்தப் பெண் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார். தன்னால் சொந்தக் காலில் நிற்க முடியாது என்ற நிலையால் அத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு கணவரின் நிழலில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அந்தப் பெண் தள்ளப்படுகிறார். அப்படிப்பட்ட நிலையில், முறையான கல்வித் தகுதி ஒன்றே அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியும். இந்தக் காரணங் களால்தான் திருமணத்துக்குக் குறைந்தபட்சத் தகுதி வயது 21 என்பது சரியாகவே தோன்றுகிறது. பிள்ளை பெறவும், குடும்பப் பொறுப்புகளை ஏற்கவும் 18-ஐ விட 21-தான் தகுதியான வயது.

“சட்டம் போட்டு இப்படி உயர்த்தக் கூடாது, பெண்களுக்கு நல்ல ஆலோசனைகளைச் சொல்வதன் மூலமும், அவர்களை நன்கு படிக்க வைப்பதன் மூலமும் இதை அவர்களுக்கு உணர்த்தலாம்” என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும், மனநிலை மாறுவதற்குச் சட்டத்தால் ஒரு தொடக்கத்தைத் தர முடியும் என்பதும் உண்மையே. தடைகளைத் தகர்த்துப் பெண்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் காலத்தில், திருமணம் என்பது முட்டுக்கட்டையாக ஆகிவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x