Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

அமளிக்குத்தான் நாடாளுமன்றமா?

பொதுத்தேர்தலுக்கு முந்தைய கடைசி மக்களவைக் கூட்டத் தொடர் இது. நாட்டின் முதல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 333; நிராகரிக்கப்பட்ட மசோதாக்கள் ஏழு. இப்போதுள்ள 15-வது நாடாளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களின் எண்ணிக்கை 165; நிராகரிக்கப்பட்டவை 72 என்கிற எண்ணிக்கையின் வாயிலாகவே இந்த அரசாங்கத்தின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சூழலில், பொதுத்தேர்தலுக்கு முந்தைய மக்களவையின் கடைசிக் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 29 மசோதாக்கள்,புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள நான்கு மசோதாக்கள், இடைக்கால பட்ஜெட் தொடர்பான ஆறு நிதி மசோதாக்களை இந்தக் கூட்டத்தில் கொண்டுவர அரசு திட்டமிட்டதன் நியாயம் புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால், இப்போது அரசு முன்வைத்துள்ள மசோதாக்களையும் அது நகர்த்தும் காய்களையும் பார்த்தால், மசோதாக்களை நிறைவேற்றி அரசியல் செய்வதைவிடவும் அவை நிறைவேறாமல் போன காரணங்களைச் சொல்லி, அரசியல் செய்வதில்தான் ஆர்வம் இருப்பதாகத் தோன்றுகிறது. மக்களவைக் கூட்டத்தொடர் தொடங்கி, ஒவ்வொரு நாளும் நடக்கும் அமளிகளுக்கு வெறுமனே எதிர்க் கட்சிகளை மட்டும் குறைகூறி அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. ஆந்திர மாநிலம் சீர்குலைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் மத்தியில் ஆட்சிக்கு வரும் புதிய அரசு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணட்டும் என்று காங்கிரஸ் ஒதுங்கிக்கொண்டிருந்தால், கௌரவமாவது எஞ்சியிருக்கும். அரசோ தெலங்கானாவைக் கையில் எடுத்திருக்கிறது.

வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிறுபான்மை மாணவர்கள், பெண்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் அலைக்கழிக்கப்படுவது தொடர்பாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. டெல்லியில் அருணாசலப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரின் மகனே அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். நடவடிக்கை எடுக்காமல் தூங்கிய மத்திய அரசுக்குப் பதிலாக இங்கே யார் தலையிடுவது? மசோதாவில் வழி இருக்கிறதா?

வகுப்புக் கலவரத்தைத் தடுக்க உத்தேசிக்கும் மசோதாவுக்கு எதிர்பார்த்தபடியே பா.ஜ.க. கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் தன்மை இருப்பதால், இந்த வடிவில் இதை ஏற்க முடியாது என்று இடதுசாரிக் கட்சிகளும் எதிர்த்துள்ளன. மாநில அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் எதிர்த்துள்ளன.

அரசு முதலில் நிறைவேற்ற விரும்பும் மசோதாக்களைத் தீவிரமாக எதிர்க்கும் கட்சிகளிடம் பேச வேண்டும்; அவர்கள் தரப்புக்கும் செவிசாய்க்க வேண்டும்; அதற்கேற்ப நியாயமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பின்னரே, மசோதாக்களை நிறைவேற்ற முனைய வேண்டும். வெற்று அரசியல் காரணங்களுக்காகவும் வாக்கு வங்கிகளைக் குறிவைத்தும் ஆட்சி நடத்தாமல், நாட்டின் நலன் கருதி ஆட்சி நடத்தினால் ஆரோக்கியமாக இருக்கும். இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பான நிதி மசோதாக்களை மட்டுமாவது விரிவாக விவாதித்து நிறைவேற்றிவிட்டு, பிற மசோதாக்களை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவைப்பதே விவேகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x