Published : 09 Oct 2014 08:36 AM
Last Updated : 09 Oct 2014 08:36 AM
பதினோரு ஆண்டுகளாக நிலவிய போர் நிறுத்தத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும் மக்கள் வசிக்கும் வீடுகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக பீரங்கிகளால் சுட்டுவருகிறது. இந்தியத் தரப்பில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவருகிறார்கள். இந்தியாவும் பதிலடித் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்ரதானுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது தற்போது போர் நிறுத்தம்தான் நிலவுகிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? பேச்சுவார்த்தை, சமாதானம், நல்லுறவு, போர் நிறுத்தம் போன்றவற்றையெல்லாம் இந்தச் சம்பவங்கள் கேலிக்குரியவையாக ஆக்கிவிட்டன.
இரண்டு தரப்புகளும் மாறிமாறிக் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற விவகாரங்களில் பொதுமக்களான நமக்குத் திட்டவட்டமான, உண்மையான தகவல்கள் எதுவும் கிடைப்பதில்லை. எனினும், ஒன்று மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். வெள்ளத்தால் ஏற்கெனவே சீர்குலைந்துபோயிருக்கும் காஷ்மீரை, வாழ்வதற்கு கொஞ்சம்கூட தகுதியற்ற ஒரு பகுதியாக இதுபோன்ற சம்பவங்களும் போர்களும் ஆக்கிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருந்தாலும், ராணுவம்தான் முழு அதிகாரம் பெற்றதாக இருக்கிறது. ராணுவ ரீதியாகவும் வெளியுறவு தொடர்பாகவும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெயரளவுக்கு அரசிடம் இருந்தாலும் ராணுவம்தான் எதையும் தீர்மானிக்கிறது. எனவே, கடந்த சில நாட்களாக இந்திய எல்லைகள் மீது ராணுவம் சுட்டுவருகிறது. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (எல்.ஓ.சி.) வரையிலும் நடந்த தாக்குதல்கள் இப்போது சர்வதேச எல்லை (ஐ.பி.) என்று இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லையையும் தாண்டிவந்திருப்பதாகக் கிடைக்கும் தகவல்கள் கவலையை அதிகப்படுத்தியிருக்கின்றன.
சிறு அசைவும் இக்கட்டான சூழலை ஏற்படுத்திவிடும் என்ற சூழலில் பொறுப்பே இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் காஷ்மீரில் கருத்தறியும் வாக்குக்கணிப்பு நடத்த வேண்டும் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாட ஆரம்பித்தார். இந்தியாவிடம் உள்ள காஷ்மீர்ப் பகுதியை முழுதாக மீட்போம், ஒரு அங்குல நிலத்தைக்கூட இந்தியாவிடம் விட்டுவைக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பிலாவல் புட்டோவும் பேசியிருக்கிறார். பிற கட்சிகளும் காஷ்மீரை விட்டுத்தர மாட்டோம் என்றே கூறி வருகின்றன.
இந்த மோதல் மேலும் வளர இடம் கொடுக்கக் கூடாது. இரண்டு நாடுகளின் இன்றைய பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை சிறிய அளவிலான போர்கூட இரு நாட்டு மக்களைத்தான் பெரிதும் பாதிக்கும் என்ற எளிமையான உண்மை இரண்டு தரப்புகளுக்கும் தெரியாததல்ல. குறுகிய பலன்களை அறுவடை செய்துகொள்வதற்கான தந்திரங்களாகவே வெறுப்புப் பேச்சுகளையும் தாக்குதல்களையும் கருத வேண்டியிருக்கிறது. இன்னொரு நாட்டை மட்டுமல்ல தன் நாட்டையும் பலிகொடுப்பதுதான் புவியரசியல் விளையாட்டுகளின் முடிவு. அதை நோக்கி பாகிஸ்தான் நகர்கிறதோ என்ற அச்சம்தான் இப்போது ஏற்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment