Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
எரியும் எதிர்ப்புகளுக்கு இடையே பெட்ரோலியத் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முடிவை எடுத்திருக்கிறது மெக்ஸிகோ. தனியார் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அரசு நிறுவனமான ‘பெமெக்ஸ்’ உடன் சேர்ந்து துரப்பணப் பணிகளை மேற்கொள்ளவும் அரசுடன் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளவும் இந்த முடிவு வழிவகுக்கும்.
“எரிசக்தித் துறையை நவீனப்படுத்த தனியார் முதலீடு தேவை. இந்த மாற்றம் முக்கியமான ஒரு சீர்திருத்தம். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்று இந்த முடிவுக்கு நியாயம் கற்பிக்கிறார் அதிபர் என்ரிக் பென்யா நியத்தோ.
எதிர்க் கட்சியினரோ “நாட்டை விற்கும் முடிவு இது” என்கிறார்கள்.
சர்வதேச அளவில் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியில் ஆறாவது இடத்தில் இருக்கும் மெக்ஸிகோ, பெரிய அளவில் தன் வருவாய்க்கு பெட்ரோலியத் துறையை நம்பியிருக்கிறது. அதன் ‘பெமெக்ஸ்’ நிறுவனம்தான் லத்தீன் - அமெரிக்க நாடுகளிலேயே இரண்டாவது பெரிய நிறுவனம். ஆனால், இப்போது அது மோசமான நிலையில் இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் நாளொன்றுக்கு 34 லட்சம் பீப்பாய்களாக இருந்த மெக்ஸிகோவின் எண்ணெய் உற்பத்தி இப்போது 25 லட்சம் பீப்பாய்கள் என்றாகிவிட்டது.
பிரேசிலைப் போலக் கடலடி வளங்களை மெக்ஸிகோ துரப்பணம் செய்ய ‘பெமெக்’ஸின் வறிய நிலை தடையாக இருக்கிறது. இந்நிலையில்தான் பெட்ரோலியத் துறையைப் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடும் முடிவை எடுத்திருக்கிறார் என்ரிக் பென்யா நியத்தோ. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேறிவிட்டாலும், மெக்ஸிகோவின் 32 மாகாணங்களில் குறைந்தது 17 மாகாணங்களின் ஆதரவைப் பெற வேண்டி உள்ளது. என்ரிக் பென்யா நியத்தோ அது சாத்தியம் என்று நம்புகிறார்.
மெக்ஸிகோவின் பெட்ரோலிய வளம் ஒருகாலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. 1938-ல் அப்போதைய அதிபர் லாசரோ கார்டெனாஸ்தான் “மெக்ஸிகோவுக்கு அதன் கனிம வளங்கள் மீது உரிமை இருக்கிறது” என்று சொல்லி பெட்ரோலியத் துறையை தேசியமயமாக்கினார். இப்போது மீண்டும் தனியார் வசம் அது செல்வதை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடம் மெக்ஸிகோ அடைந்த சரணாகதியாக எதிர்க்கட்சியினர் பார்க்கிறார்கள்.
அவர்களுடைய எதிர்ப்பில் நியாயம் இல்லாமல் இல்லை. இது பெட்ரோலியத் துறையோடு முடியப்போவதில்லை; அடுத்து மின்துறை, எரிசக்தித் துறை என்று நீளும்; தெற்கு நோக்கிய பசிகொண்ட விழிகளுடன் மெக்ஸிகோவையே பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது சரியான வாய்ப்பு. என்ரிக் பென்யா நியத்தோவுக்கு இது புரியாமல் இல்லை. பொருளாதார நெருக்கடிகள் அவரை நெருக்குகின்றன.
பெட்ரோலிய வளம் கொண்ட எல்லா நாடுகளும் செய்யும் அதே தவறே இங்கும் நிகழ்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏனைய துறைகளையும் கவனிக்காமல், பெட்ரோலிய வளத்தை மட்டுமே பிரதானமாக நம்புவது; பின், சந்தை தள்ளும் குழியில் விழுவது. வன்முறையால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு நாடு மீண்டும் அதே பாதையை நோக்கிச் செல்லுமோ என்ற அச்சம் எழுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT