Published : 20 Oct 2014 09:33 AM
Last Updated : 20 Oct 2014 09:33 AM

வெற்றியின் பின்னால் இருக்கும் எச்சரிக்கை

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டப் பேரவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் - தேசியவாதக் கூட்டணி அரசின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசு மீது பலத்த விமர்சனங்கள் இருந்த நிலையில், தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்திருக்காது. இதை நன்கு அறிந்துகொண்டதால்தான் பாஜகவும் சிவசேனையும், அடிப்படைக் கொள்கை ஒற்றுமையைக்கூடக் கணக்கில் கொள்ளாமல், கூட்டணியை முறித்துக்கொண்டன.

சிவசேனைக்கு எப்படியேனும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசை. மக்களவைத் தேர்தலுக்குப் பின், ஆறு மாநில இடைத் தேர்தல்களில் பின்னடைவைச் சந்தித்த பாஜகவுக்கு மீண்டும் தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அத்துடன் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாகக் கூறும் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடி. எனவே, பாஜகவினர் இந்த இரண்டு மாநிலத் தேர்தல்களில் இன்னும் முனைப்புடன் உழைத்தனர். “ஒரு பிரதமராக இருந்துகொண்டு இப்படி மாநிலத் தேர்தலுக்காக அரசு செலவில் பிரச்சாரம் செய்யலாமா?” என்று உத்தவ் தாக்கரே விமர்சிக்கும் அளவுக்கு, மோடியும் பரபரப்பாகப் பிரச்சாரம் செய்தார்.

கூட்டணி முறிவுக்குப் பிறகு, சிவசேனையைப் பாஜக கடுமையாக விமர்சனம் செய்து பேசாவிட்டாலும், சிவசேனையின் பிரச்சாரம் காரசாரமாகவே இருந்தது. சிவாஜியை எதிர்த்துப் போரிட்ட அப்சல் கானுடன் பாஜகவை ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு சிவசேனையின் கோபம் சென்றது. எனினும், தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, இவ்விரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பாஜக ஆட்சியமைக்க வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

ஹரியாணாவில் தனித்தே ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. ஓம் பிரகாஷ் சவுதாலா ஜாமீனில் வந்து பிரச்சாரம் செய்தும் அந்தக் கட்சியால் இரண்டாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்திருக்கிறது. பாஜகவின் வெற்றிக்கு மோடியின் பிரச்சாரம், தொண்டர்களின் உழைப்பு, மாநிலத் தலைவர்களின் பங்களிப்பு, அமித் ஷாவின் தலைமை என்று பல அம்சங்கள் சாதகமாக இருந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியோ தன்னை மாற்றிக்கொள்ளவும் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவும் தயாராக இல்லை. தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பல்ல என்ற முதல் வாசகத்துடன் தான் காங்கிரஸ்காரர்கள் பேசவே ஆரம்பிக்கின்றனர். மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தோல்விக்காகக் கட்சித் தலைமையை மாற்ற வேண்டாம் என்ற முடிவை காங்கிரஸ் மட்டுமல்ல,

தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் எடுத்தன. அது மட்டுமல்லாமல் இன்னமும் மக்களை நெருங் காமலேயே அந்தக் கட்சிகள் இருக்கின்றன. தங்களை மறுபரிசீலனை செய்துகொள்வதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல, பாஜகவும் பாடம் கற்றுக்கொண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது. எச்சரிக்கையின்றி எந்த வெற்றியையும் மக்கள் அளிப்பதில்லை என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x