Published : 11 Mar 2014 09:42 AM
Last Updated : 11 Mar 2014 09:42 AM

தீர்வு எங்கிருந்து வரும்?

உக்ரைனின் தேசியக் கவிஞரான தாரஸ் ஷெவ்சென்கோவின் 200-வது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் உக்ரைனியர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவகையில் ரஷ்யாவுக்கு எதிரான அறைகூவலை உக்ரைன் மக்கள் விடுத்திருக்கிறார்கள்.

சோவியத் யூனியன் பிளவுபட்டபோது உக்ரைன் தனி நாடானாலும், ரஷ்யாவின் துணை நாடுபோலத்தான் இதுநாள்வரை இருந்திருக்கிறது. உக்ரைனின் பொருளாதாரமும் கலாச்சாரமும் ரஷ்யாவைச் சார்ந்தே இருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய உறவுக்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவை விரும்பி உக்ரைனியர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்ததும் பிரச்சினை ஆரம்பமானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் தலைநகர் கீவில் சுதந்திரச் சதுக்கத்தை முற்றுகையிட, போராட்டம் தீவிரமடைந்தது. உக்ரைனைச் சரிகட்ட 15,000 கோடி டாலர்கள் கடன், உக்ரைனியர்களுக்கான இயற்கை எரிவாயுக்கு விலைக் குறைப்பு என ஏகப்பட்ட அறிவிப்புகளை ரஷ்யா வெளியிட்டாலும், போராட்டக்காரர்கள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து மோதல்கள், கலவரங்கள்… கடந்த பிப்ரவரி 20 அன்று மட்டும் கலவரத்தில் 64 பேர் கொல்லப்பட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டுக்குப் பிறகு, பதவி விலகுவதற்கும் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதற்கும் பிரதமர் யனுகோவிச் ஒப்புக்கொண்டார். நாடாளுமன்றமும் அவரது அதிகாரங்களைப் பெரிதும் குறைத்தது. ஆனாலும், பலனில்லை. போராட்டக்காரர்கள் கைக்கு கீவ் நகரம் வந்தபோது யனுக்கோவிச் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். இடைக்காலப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்செனிய் யாட்சென்யுக்கை ரஷ்யா நிராகரித்துவிட்டது. இப்போது உக்ரைனின் தீபகற்பமான கிரிமியா நகரை ரஷ்யப் படைகள் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றன.

ரஷ்யாவுக்கு உக்ரைன் ஏன் அவ்வளவு முக்கியம்?

கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவூதி அரேபியாவுடன் போட்டி போடும் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 70%-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உக்ரைன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், ரஷ்யாவின் ராணுவ நிலைகளில் ஒன்றுபோலத்தான் உக்ரைனும். உக்ரைன் மக்கள்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ரஷ்யர்களைப் பாதுகாக்கவே படைகளை இறக்கியிருக்கிறோம் என்று ரஷ்யா சொன்னாலும் இந்த ஆக்கிரமிப்பின் அடிப்படை இதுவே. ரஷ்ய ஆக்கிரமிப்பால் கோபமடைந்திருக்கும் ‘ஜி8’ உறுப்பினர்களான அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஜூனில் ரஷ்யா தலைமையில் சோச்சியில் நடைபெறவிருக்கும் ‘ஜி-8’ உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதோடு, ரஷ்யாவை அமைப்பிலிருந்து நீக்குவதைப் பற்றியும் ஆலோசித்துவருகின்றன.

வல்லரசுகளின் விளையாட்டுக்கான மேலும் ஒரு களமாக உக்ரைன் மாறியிருக்கிறது. உக்ரைன் பிரச்சினை நீடித்தால் பெட்ரோல் விலையில் தொடங்கி சர்வதேச அமைதிவரை எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்படும். அதேநேரத்தில் இதை சர்வதேசப் பிரச்சினையாக அணுகும்போது அங்குள்ள மக்களின் நலன் நம் கவனத்திலிருந்து தவறிப்போகிறது. சர்வதேச நாடுகள் களமிறங்கும்போது உக்ரைனியர்களின் உரிமைக் குரல் அமுங்கிப்போய் மேலாதிக்கத்துக்கான வல்லரசுகளின் போட்டியே முன்வந்து நிற்கும். மொத்தத்தில், கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தீர்வு என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x