Published : 18 Oct 2013 10:09 AM
Last Updated : 18 Oct 2013 10:09 AM
புகையிலை ஆதரவு முடிவை உறுதிப்படுத்தியிருக்கிறார் பிகார் முதல்வர் நிதிஷ் குமார். சில நாட்களுக்கு முன் புகையிலைப் பொருட்களுக்கு வரிவிலக்கை அறிவித்தது பிகார் அரசு. நாடெங்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்தாலும், தன் முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று நிதிஷ் அரசு அறிவித்திருக்கிறது.
ஓராண்டுக்கு முன் இதே நிதிஷ் அரசு, புகையிலை எதிர்ப்பு நாள் அன்று புகையிலை, நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா ஆகியவற்றுக்குத் தடை விதித்தது. இப்போது புகையிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வரிவிலக்கை அறிவித்திருப்பதாகக் காரணம் சொல்கிறது. நிதிஷின் வாக்கு அரசியலைத் தாண்டி, நாட்டிலேயே அதிகம் புகையிலையை உற்பத்திசெய்யும் மாநிலத்தில் கிடைத்திருக்கும் இந்த வரிவிலக்கு எப்படியும் புகையிலைசார் நிறுவனங்களின் லாபிக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் புகையிலையாலேயே புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர். 30 முதல் 69 வயது வரைக்குட்பட்ட புற்றுநோய் மரணங்களில் 70 சதவீதத் துக்குப் புகையிலையே காரணம். பிகார் நிலைமையும் துயரம்தான். பிகாரில் ஆண்களில் 63% பேரும் பெண்களில் 30% பேரும் புகையிலை அடிமைகள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். இப்படிப்பட்ட சூழலில், புகையிலைச் சாகுபடிப் பயிற்சிக்குத் தனி மையம், புகையிலை உற்பத்திக்கு வரிவிலக்கு போன்ற பிகார் அரசின் போக்குகள் மோசமான முன்னுதாரணங்கள்.
புகையிலைப் பொருட்களை விநியோகிக்கவும் விற்கவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதாவை ஒரு வாரத்துக்கு முன்புதான் நிறைவேற்றியது ஐரோப்பிய நாடாளுமன்றம். முன்னதாக, அந்த மசோதாவைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சித்தன புகையிலைசார் நிறுவனங்கள். மசோதாவின் சில பிரிவுகளை வலுவிழக்கச் செய்ய முடிந்ததேயன்றி, மசோதா நிறைவேற்றத்தை அவற்றால் தடுக்க முடியவில்லை. முன்பைவிடக் கடுமையான விதிகள், படிப்படியாக நறுமண சிகரெட்டுகள் - மென்தால் சிகெரெட்டுகள் தயாரிப்புக்கான தடை ஆகியவற்றுக்கு இந்த மசோதா வழிவகுக்கும். அதிகரிக்கும் புற்றுநோய் மரணங்களைக் குறைக்க ஐரோப்பாவைப் போலவே வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவிலும் எழ ஆரம்பித்திருக்கின்றன.
ஆண்டுதோறும் ஏழு லட்சத்துக்கும் அதிகமான ஐரோப்பியர்களும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களும் புற்றுநோய்க்குப் பலியாகும் சூழலில், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் இனிவரும் காலங்களில் புகையிலைசார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அங்கே ஏற்படும் இழப்பை மூன்றாம் உலக நாடுகளில் ஈடுசெய்ய விரும்புகின்றன புகையிலைசார் நிறுவனங்கள். பிகார் அரசின் வரிவிலக்கை இந்தப் பின்னணியிலிருந்து விலக்கிப்பார்க்க முடியவில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment