Published : 24 Dec 2013 09:28 AM
Last Updated : 24 Dec 2013 09:28 AM
ஒருகாலத்தில் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தோம். வேலைவாய்ப்பின்மைதான் வறுமையின் தாய் என்று நம்பினோம். அதில் உண்மையும் இருந்தது. அந்நாட்களில் வேலை கிடைப்பது அரிதாக இருந்தாலும், வேலை கிடைத்துவிட்டால், சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. இப்போது கிடைப்பதற்கரிய பொருள் அல்ல வேலை; சொல்லப்போனால், பல துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஒரு சவால். ஆனால், வறுமை குறைந்திருக்கிறதா?
‘மனித வளர்ச்சிக்கான கழகம்’ கடந்த 10 ஆண்டு தேசிய மாதிரிக் கள ஆய்வுப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரித்திருக்கும் ஆய்வறிக்கை பதில் தருகிறது. “நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டு முதல் நான்கு சதவீதம் வரைதான்” என்று சொல்லும் இந்த ஆய்வறிக்கை, வேலையில் இருப்பவர்களின் கல்வி, திறன் அறிவு தொடர்பாக இரு எல்லைகளையும் தொடுகிறது. ஒருபுறம், “உயர் கல்வி அதிகரிக்க வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. வேலையில்லாதோரில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டதாரிகள்” என்கிறது.
மறுபுறம், “வேலை செய்கிறவர்களில் கணிசமானோருக்கு, வேலைக்குரிய கல்வித் தகுதியும் வேலைத் திறனும் போதிய அளவு இல்லை. மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் கல்வியறிவே இல்லாதவர்கள்” என்கிறது. எனில், இளைய சமுதாயத்துக்கு நாம் கொடுக்கும் கல்வியும் உணவும் ஊட்டமும் எத்தகையவை; எப்படிப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குகிறோம் என்ற கேள்விகள் எழும்போதே, பிரச்சினையின் மையத்தை ஆய்வறிக்கை உடைக்கிறது.
“கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ. 27.20, நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ. 33.33 ஆகியவற்றுக்குக் கீழே சம்பாதிப்பவர்கள் வறியவர்கள் என்ற டெண்டுல்கர் குழுவின் அதிகாரபூர்வ வறுமை நிர்ணயத்துக்குக் கீழே இந்தியாவில் 25% பேர் ஊதியம் பெறுகிறார்கள். ஐ.நா. சபையின் அளவுகோல்படி ஒரு நாளைக்கு சுமார் 120 ரூபாய்க்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள்தான் ஏழைகள் என்ற அளவுகோலைப் புகுத்தினால், நாட்டில் வேலைக்குச் செல்வோரில் சுமார் 58.5% பேர் ஏழைகள்” என்ற புள்ளிவிவரங்களின் ஊடே அறிக்கை சுட்டிக்காட்டும் முக்கியமான உண்மை, “வேலை கிடைக்காதவர்களைவிட வேலைக்குச் செல்வோரே வறுமையில் அதிகம் உழல்கின்றனர்” என்பது.
எப்படி உருவாகிறது இது?
விவசாயிகளின் பிழைப்பு எப்படி என்பது நமக்குத் தெரியும். ஆனால் சமீபத்தில், உணவு தானியப் பணவீக்கத்துக்கான காரணங்களைப் பட்டியலிட்ட வேளாண் உற்பத்திச் செலவு – விலை நிர்ணய ஆணையத் தலைவர் அசோக் குலாத்தி, அவற்றில் முக்கியமானதாகச் சொன்னது எதைத் தெரியுமா? கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் 18% உயர்ந்திருப்பதை. விலைவாசி எத்தனை மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை அரசாங்கப் பிரதி நிதிகளால் சொல்ல முடியுமா?
அதிகார வர்க்கத்தின் ஒவ்வோர் அணுவிலும் இந்த மனோபாவம் உறைந்திருப்பதுதான் பிரச்சினை. தனக்கான சம்பள நிர்ணயத்தில் சாமர்த்தியமாக இருக்கும் அரசியல் – அதிகார வர்க்கம் பிறரிடம் என்ன அக்கறையைக் காட்டுகிறது? அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்சக் கூலிக்கும் விலைவாசிக்கும் எந்த அளவு பொருந்திப்போகிறது?
மனோபாவம் மாற வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT