Published : 17 Sep 2014 09:36 AM
Last Updated : 17 Sep 2014 09:36 AM
“இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச சமீபத்தில் கூறியிருப்பதை எந்த வகையில் எடுத்துக்கொள்வதென்றே தெரியவில்லை.
இந்த விஷயம்குறித்து முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, அப்போதைய இலங்கை அதிபர் ஜூனியஸ் ஜெயவர்த்தன ஆகியோர் 1987-ல் பேசி முடிவுசெய்து கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இன்றுவரை அமல்படுத்தப்படாமலேயே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதால் இனி சமரசம் ஏற்பட்டுவிடும் என்ற நடுநிலையாளர்களின் நம்பிக்கை ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை பலிக்கவில்லை.
இலங்கையின் அரசியல் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டுவிட்ட 13-வது திருத்தம் என்பது ஒன்றுபட்ட இலங்கை என்ற அரசியல் கட்டமைப்பைக் காப்பதுடன் தமிழர்களைச் சம உரிமையுள்ள இலங்கைக் குடிமக்களாக அங்கீகரிக்கும் தன்மையைக் கொண்டது. ஆனால், அந்தச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதில் இலங்கை அரசுக்கு ஈடுபாடு துளியும் இல்லை என்பதுதான் உண்மை.
போரின்போது அப்பாவி மக்களின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள், புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதிலும் விசாரணை என்பது கண்துடைப்பாகவே இருக்கிறது. ஐ.நா-வின் சர்வதேச விசாரணைக் குழுவையும் அனுமதிக்க முடியாது, அது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் இலங்கை அரசு கூறிவிட்டது.
போர்க் குற்றங்கள்குறித்தும் மனித உரிமைகள் மீறல்குறித்தும் கேட்டபோதுகூட, அந்தக் குற்றங்களுக்குக் காரணமே விடுதலைப் புலிகள்தான் என்றும், காணாமல் போனவர்களில் இலங்கை ராணுவத்தினரும் அவர்களுடைய குடும்பத்தவரும்கூட இருப்பதால், அதுபற்றியும் உள்நாட்டில் முதலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறி, அந்தக் கோரிக்கையையே திசைதிருப்பியிருக்கிறார் ராஜபக்ச.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணி அரசுக்கு ஆட்சியில் முக்கியமான அதிகாரங்களும் பொறுப்பும் தராமல், முனிசிபல் சேர்மன் போன்ற அலங்காரப் பதவியாக மாகாண முதல்வரை ஆக்கிவிட்டதை என்னவென்று சொல்வது? இதுபற்றிய கேள்விக்குத்தான், “பேசத் தயாராக இருக்கிறோம், பேச அவர்கள்தான் வர வேண்டும்” என்றிருக்கிறார் ராஜபக்ச.
பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ராஜபக்ச ஒருபுறம் சொல்கிறார். மறுபுறம், தமிழர் பகுதிகளில் காணப்படும் ராணுவ ஆக்கிரமிப்பு, தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்கள், இலங்கையின் மத்திய அரசிடமே நீடிக்கும் காவல்துறை நிர்வாகம் ஆகிய நிலைப்பாடுகள். அவருடைய அரசுக்குக் கொஞ்சமும் பரிசீலிக்கும் மனம் இல்லை என்றால் அந்தப் பேச்சுவார்த்தையால் பயன்தான் என்ன?
ராஜபக்ச அவர்களே, நிறையப் பேசியாயிற்று. உங்கள் அக்கறையை இனி செயலில் காட்டுங்கள். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதென்பது பாகப்பிரிவினையோ கூடுதல் சலுகையோ அல்ல. உங்கள் குடிமக்களில் ஒரு பகுதியினருக்கு நீங்கள் அளிக்கும் சம உரிமை. இலங்கை அரசு தன்னுடைய அக்கறையின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்த ஒரேயொரு வழிதான் இருக்கிறது. 13-வது சட்டத் திருத்தத்தை அமலாக்க நடவடிக்கை எடுங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT