Published : 08 Sep 2014 09:17 AM
Last Updated : 08 Sep 2014 09:17 AM
இந்தியத் துணைக் கண்டத்தில் புதிய கிளையைத் தொடங்கியிருப்பதாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி அறிவித்திருப்பதை, இந்தியர்களின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்போதும் போல நம் மக்கள் மத எல்லைகளையெல்லாம் கடந்து, இந்தப் பிரிவினைவாதிகளை விரட்டியடிப்பார்கள். முஸ்லிம் சமூகத்திலிருந்தே ஜவாஹிரிக்கு எதிராக எழுந்திருக்கும் கடுமையான எதிர்ப்புகள் நம்முடைய சரியான பதிலடி சமிக்ஞைகள்.
இதற்காக நாம் சந்தோஷப்படும் அதே தருணத்தில், நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. முஸ்லிம்கள் மக்கள்தொகையைப் பொறுத்தவரை உலகிலேயே மூன்றாவது இடம் இந்தியாவுக்கு.
ஆனால், இங்குள்ள முஸ்லிம்களின் சமூக, பொருளாதார வாழ்நிலை எப்படி இருக்கிறது? ஊர்களில் உள்ள அவர்களின் இருப்பிடங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பிலும் இண்டு இடுக்குகளில் நெரிபட்டு, மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் சூழலில்தான் அவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் முஸ்லிம் என்றாலே வாடகைக்கு வீடுகூடக் கிடைப்பது இல்லை. வேலைவாய்ப்புகளிலும் இதே நிலைதான். சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய பகுதிகளையும், மக்களையும் கைதூக்கிவிட எடுக்கும் சிறப்பு நடவடிக்கைகள் முஸ்லிம்களை அரவணைக்கவில்லை. வாய்ப்புகள் மறுக்கப்படும், மையநீரோட்டத்திலிருந்து துரத்தப்படும் ஒரு சூழலில்தான் பெரும்பாலான இந்திய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்தச் சூழலைத்தான் அல்-காய்தா, ஐ.எஸ். போன்ற அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகின்றன; ஊடுருவ முயல்கின்றன.
இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் இந்தச் சூழலில்தான் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதுடன் தொழில் செய்வதற்கான மூலதனங்களைத் தடையின்றிப் பெறக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அத்துடன் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் இணைப்பு, சுகாதாரமான சுற்றுப்புறம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்தித்தருவது முக்கியம்.
நமது அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை வகுக்கவில்லை என்றாலும், தேவை ஏற்பட்டால் வேறு வகையில் அதை அமல்செய்ய வழியும் இல்லாமல் இல்லை. கேரளம், பிஹார், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட ஒதுக்கீடு இருப்பது குறிப்பிடத் தக்கது. மேற்கண்ட மாநிலங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, மத்திய அரசு செயல்படலாம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் முஸ்லிம்கள் கல்வியறிவைப் பெறுவதில் சமீபகாலமாகக் காட்டிவரும் ஆர்வத்தையும், தேசிய நீரோட்டத்தில் சேர அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம் குடும்பத்தில் ஒரு சகோதரன் கீழிருக்கும்போது அதை அமைதியாகப் பார்த்துக்கொண்டு நாம் நடக்கலாகாது. நம்மில் பேதங்கள் நீங்கினால் பிரித்தாள முயலும் எவரையும் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment