Published : 10 Sep 2014 08:47 AM
Last Updated : 10 Sep 2014 08:47 AM

காஷ்மீர் உயிர் பெறட்டும்!

இந்தியாவையே உலுக்கியிருக்கிறது ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளம். அரசியல் காரணங்களால் மிகவும் நைந்துபோயிருக்கும் காஷ்மீருக்கு இந்த வெள்ளம் மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து காஷ்மீர் மீண்டு வருவதற்கு வெகு காலம் ஆகும் என்பதுதான் பெரும் துயரம். ஜம்மு-காஷ்மீரைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கும் இந்த வெள்ளத்தைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்திருப்பது சரியான முடிவு.

ஜம்மு பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து மூன்று நாட்களாகப் பெய்த மழையால் ஜீலம், லிட்டர், சிந்து ஆகிய நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டன. மழை, வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. உயிரிழப்பும் சேதமும் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

தேசியப் பேரிடர் நிவாரணப் படை, தரைப்படை, விமானப்படை ஆகியவை உடனடியாக உதவிக்கு விரைந்துள்ளன. மாநில அரசின் ஊழியர்களும் மக்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடனடியாக காஷ்மீருக்குச் சென்று உதவிப் பணிகளுக்கு உத்வேகம் அளித்திருப்பதுடன் நெருக்கடியான இந்த நேரத்தில், மத்திய அரசும் நாடும் காஷ்மீர் மக்களின் பக்கம் இருக்கின்றனர் என்ற சமிக்ஞையைக் கொடுத்திருக்கின்றனர்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறது. மேலும், நிவாரணப் பணிகளுக்காக அரசு மொத்தம் ரூ. 2,100 கோடியை ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கும் என்று அறிவித்திருக்கிறது.

ராணுவம் 20,000 வீரர்களை மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. 15,000-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் முகாம் களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவும் மருந்துகளும் தரப் படுகின்றன.

இந்தியாவின் பிற மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்கூட இந்த நெருக்கடியான நேரத்தில் காஷ்மீர் மக்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழக முதல்வரும் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடி தர முன்வந்திருக்கிறார். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பரஸ்பரம் உதவிகள் செய்துகொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தயாராக இருப்பது ஒரு நல்ல அறிகுறி.

பிரிவினைவாதத்தால் காலம்காலமாகத் துண்டாடப்பட்டுவரும் காஷ்மீர் மக்கள் நிறையவே ஆயுதங்களையும் அழிவுகளையும் பார்த்துவிட்டார்கள். இந்தக் காரணங்களால் அந்த மாநில மக்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த மக்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத சூழலை வெள்ளம் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. காஷ்மீர் யாருக்கு என்ற கேள்வியைவிட, காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உணர்வே இப்போது மேலோங்கி நிற்கிறது.

நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை காஷ்மீரிகளுக்கு உணர்த்த இந்தத் தருணத்தில் நாம் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பது முக்கியமானது. ஒட்டுமொத்த தேசமும் காஷ்மீர் சகோதரர்களுக்குத் தோள் கொடுக்கக் கைகோப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x