Published : 20 Sep 2014 08:53 AM
Last Updated : 20 Sep 2014 08:53 AM
'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவில் உங்களோடு மேலும் நெருக்கமாகின்றன உங்கள் நடுப் பக்கங்கள்! தமிழ்ச் சமூகத்தின் வலுவான குரலாக உங்கள் நடுப்பக்கங்கள் ஒலிக்கின்றன என்பதையும், தமிழ்ச் சமூகத்தின் உரையாடல் வெளியாக அவை வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கைச் செலுத்திவருகின்றன என்பதையும் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில், நடுப்பக்கங்களை மேலும் மேம்படுத்த வாசகர்கள் வலியுறுத்திய சில மாற்றங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தனது தலையங்கத்தின் சாட்டையைச் சனிக்கிழமையன்றும் சுழற்றினால் என்ன, வாசகர்களின் எதிர் வினைக்கும் பங்கேற்புக்கும் களமாக அமையும் ‘இப்படிக்கு இவர்கள்’ பகுதியை சனிக்கிழமைக்கும் நீட்டித்தால் என்ன என்றெல்லாம் கடிதம் அனுப்பிய வாசகர்கள் விருப்பம் இன்று நிறைவேறுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை எப்படி உங்கள் நடுப்பக்கங்களின் இடப்பக்கம் வெளிவருமோ அதே வழக்கமான பகுதிகளுடன், சனிக்கிழமை அன்றும் இடப்பக்கம் வெளியாகும். (இதேபோல், ‘உங்கள் குரல்’ தகவல் தொடர்பு வசதி, மக்களின் பிரச்சினைகளைச் சொல்லும் களமாக உருவெடுத்திருக்கிறது. இனி, ‘உங்கள் குர’லுக்கு வரக்கூடிய மக்கள் பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ‘உங்கள் குரல்’ பகுதியை மக்கள் இயக்கமாக மாற்றும் பணியையும் நமது செய்திப் பக்கங்களில் தொடங்கியிருக்கிறோம்.)
இவை எல்லாவற்றையும்விட, வாசகர்கள் சுட்டிக்காட்டிய மிக முக்கியமான விஷயம் இது: ‘தி இந்து’ ஒரு வாசிப்பு இயக்கத்தை ஏன் முன்னெடுக்கக் கூடாது? மிக முக்கியமான யோசனை இது. வாசிப்புதான் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும். இதை நாம் முழுமையாக உணர்கிறோம். இன்று முதல், சனிக்கிழமைதோறும் ‘நூல்வெளி’ முழுப் பக்கமாக வலப்பக்கத்தில் சனிக்கிழமைதோறும் வெளியாகும். வாசிப்பின் வழியாக ஒரு மேலான சமூகத்தை உருவாக்குவதும், எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களுக்கும் உரிய கவுரவத்தை அளிப்பதும்தான் இந்தப் பக்கங்களின் நோக்கம். வெளிநாடுகளில், பல சமூகங்களில் வாசிப்பின் வழியே பெரும் புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. வாசிப்புக்கான எண்ணற்ற இயக்கங்களை அவர்கள் வளர்த்தெடுத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் தரமான எழுத்தாளர்கள், திரைப்பட நட்சத்திரங்களைவிட அதிகமாக அங்கு மதிக்கப்படுவது.
நமது சமூகத்திலோ, புத்தகங்களும் படைப்பாளிகளும் இருக்க வேண்டிய இடத்தில், துரதிர்ஷ்டவசமாக சினிமா இருக்கிறது. 50 ஆண்டுகள் முக்கியமான படைப்புகளை எழுதிய மூத்த எழுத்தாளருக்குக் கிடைக்காத முக்கியத்துவம், அடுத்த மாதம் வெளிவர விருக்கும் சினிமாவில் நடிக்கும் நடிகருக்கோ, நடிகைக்கோ கிடைப்பதன் விளைவுதான் இது. திரைத் துறையும் கலைத் துறைதான். ஆனால், அதற்கு இணையாகப் படைப்பிலக்கியத் துறையும் மதிக்கப்பட வேண்டுமல்லவா? பொதுவெளியில் அப்படிப் பட்ட நிலையைப் புத்தகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கும் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக் கிறோம். அதன் பொருட்டே, ‘தி இந்து’ தொடங்கிய வாரத்திலிருந்தே கலை இலக்கியப் பகுதியில் நூல்களுக்கான பகுதியும் வெளியானது என்றாலும், புத்தகங்களுக்கான வெளி, கலை இலக்கியத்தைத் தாண்டியும் இருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம். முக்கியமாக, அடுத்த தலைமுறைக்கு வாசிப்பை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியத்தையும், புத்தகக் கலாச்சாரத்தைத் தமிழ் வெளியில் உருவாக்க வேண்டிய சூழல் நிர்ப்பந்தத்தையும் நாங்கள் உணர்கிறோம். இதன் விளைவாக, இன்று முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் நடுப் பக்கங்களில் ‘நூல்வெளி’ என்ற பகுதி முழுப் பக்கத்துக்கு வெளியாகும். ஏற்கெனவே, சனிக்கிழமைகளில் வெளிவந்த கலை, இலக்கியம் பகுதி இனிமேல் ஞாயிறுகளில் வெளிவரும்.
ஒரு மக்கள் பத்திரிகையை உண்மையில் வழிநடத்துவது அதன் வாசகர்கள்தான். ‘தி இந்து’ உங்களால், உங்களுக்காக நடத்தப்படும் பத்திரிகை. தொடர்ந்து ஒவ்வொரு மாற்றமும் முன்னேற்றம் ஆகட்டும். இணைந்தே இருப்போம் எப்போதும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment