Published : 23 Sep 2014 08:31 AM
Last Updated : 23 Sep 2014 08:31 AM

சீனாவுடன் நாம் எப்போது எல்லையைப் பற்றிப் பேசப்போகிறோம்?

சீன - இந்திய உறவில் நட்பின் அலைகள் வீசும்படியான சந்திப்பாக நடந்திருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம்.

மோடியும் சரி, ஜின்பிங்கும் சரி, இந்தச் சந்திப்பை வித்தியாசமானதாகவும் முக்கியமானதாகவும் ஆக்குவதில் மிகுந்த ஈடுபாட்டைக் காட்டியதை நன்கு உணர முடிந்தது. குஜராத்தைப் பார்க்க ஜின்பிங் விருப்பம் தெரிவித்து அகமதாபாத் நகருக்கு முதலில் சென்றது, மோடியும் அங்கு சென்று அவரை வரவேற்றது எல்லாம் வழக்கத்துக்கு மாறான அணுகுமுறைகள். ஆனால், இந்தியாவிடம் சீனா எதிர்பார்ப்பது என்ன, சீனாவிடம் இந்தியா எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன, இந்தப் பேச்சுவார்த்தையையொட்டி நடந்த நிகழ்வுகள்.

டெல்லியில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையே விரிவான பேச்சுவார்த்தையும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும் அரங்கேறின. இருதரப்பு வர்த்தக உறவு சீனாவுக்கு மட்டும் சாதகமாக இருப்பதை மோடி சுட்டிக்காட்டியதும் அதைச் சரிசெய்வதாகக் கூறினார் ஜின்பிங். எல்லாத் துறைகளிலும் அதிகம் கொள்முதல் செய்யப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவில் சீனா முதலீடு செய்யும் என்றிருக்கிறார் ஜின்பிங். ஆக, நாம் வர்த்தகத்தைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் பேச விரும்பியது எதை என்பதை லடாக் எல்லையிலிருந்த சீன ராணுவத்தினர் மூலம் ஜின்பிங் உணர்த்தினார்.

இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே, லடாக்கின் சுமர் பகுதியில் சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்குள் வந்து, அங்கு நடைபெறும் எல்லைப்புற சாலையமைப்புப் பணிக்கு இடையூறு விளைவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தியத் தொழிலாளர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதை ஜின்பிங்கிடம் மோடி சுட்டிக் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள்குறித்து எதுவும் நிச்சயிக்கப்படாததால் இப்படி நடக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் இதைத் தீர்க்க வேண்டியது அவசியம்; அதுவரை எல்லையில் அமைதியைப் பராமரிக்க வேண்டியது நம் கடமை என்று ஜின்பிங் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, எல்லையிலிருந்து அகன்ற சீன ராணுவத்தினர், அதிபர் அங்கு திரும்பிய அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் ஊடுருவியிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, 24 அன்று நடைபெறவிருந்த இந்திய - சீன செய்தியாளர்களிடையேயான பேச்சு வார்த்தையை ரத்துசெய்திருக்கிறது இந்தியா.

பாஜக எதிர்க் கட்சியாக இருந்தபோது, சீன உறவு தொடர்பாக காங்கிரஸ் அரசை விமர்சித்ததை நாம் மறந்துவிடலாகாது. ‘சீனத் துருப்புகளை எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் அரசு, வணிக உறவை மட்டும் சீனத்துடன் தொடரலாமா?’ என்று அப்போது பாஜக காரசாரமாகக் கேள்வியெழுப்பியது. இப்போது காங்கிரஸின் வழியிலேயே அதுவும் பயணிப்பதுதான் முரண் நகை. இரு நாட்டு உறவுப் பேச்சுவார்த்தைகளின்போது எல்லைப் பிரச்சினைகளை அப்படியே நகர்த்திவிட்டு, ஏனைய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்து வது இந்திய வெளியுறவுத் துறையின் உத்திகளில் ஒன்று. இது தேவையற்றது. சீனர்கள் தங்களுடைய எல்லைகளைத் துல்லிய மாக வரையறுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நம்முடைய பேச்சு வார்த்தைகளில் அதற்கு முக்கியமான இடம் அளித்தல் அவசியம்.

ராஜதந்திரம் என்பது இருதரப்புக்கும் இடையிலான பிணக்குகளுக்கு முடிவுகட்டி, பரஸ்பர நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பி, நல்லுறவின் மூலம் ஆதாயம் அடைய வழிவகுப்பதுதான். எங்கே விட்டுக்கொடுத்து, எங்கே கேட்டுப் பெற வேண்டுமோ அதை அங்கே செய்ய வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x