Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM
இந்திய ராணுவத்தின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு வலுவான முதல் அடியை மத்திய அரசு எடுத்து வைத்திருக்கிறது. ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், நவீன சாதனங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. நிதி-பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், டெல்லியில் கடந்த வாரம் நடந்த ‘ராணுவக் கொள்முதல் கவுன்சில்' (டி.ஏ.சி.) என்ற உயர் அதிகார அமைப்பின் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ராணுவத்துக்குத் தேவையானவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பது, ஒத்துழைக்க முன்வரும் நாடுகளுடன் இணைந்து கூட்டுத் தொழில் ஒத்துழைப்பு அடிப்படையில் தொழில்நுட்பங்களைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிலேயே தயாரிப்பது, அவசரத் தேவைக்கு அதிநவீனக் கருவிகளையும் ஆயுதங்களையும் போதிய அளவுக்கு இறக்குமதி செய்வது என்று மூன்று வகையிலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் முக்கிய தேவைகள்குறித்து விவாதித்துத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிடமிருந்து 197 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை உடனடியாகக் கைவிட்டு, பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.) மூலமே 400 ஹெலிகாப்டர்களைத் தயாரித்து முப்படை களுக்கும் வழங்குவது என்பது முதல் முடிவு.
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் அர்ஜுன் ரக டாங்குகளை, தரைப்படையில் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்தவும், அதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் சக்திவாய்ந்த சிறு பீரங்கியைப் பொருத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையின் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, போர்த்திறனைக் கூட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுடன் இணைந்து, ‘ஜாவலின்' ரக ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான கூட்டு முயற்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ராணுவத்துக்கான கொள்முதலை வெளிப்படையாகவும், இந்திய நலனை மட்டுமே கருத்தில் கொண்டும் மேற்கொள்ள, வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேவையான சாதனங்களைப் பெரும்பாலும் தானே தயாரித்து, சந்திரயான், பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. போன்றவற்றை ஏவுவதில் இஸ்ரோ சாதனை படைத்ததைப்போல இந்திய ராணுவ உற்பத்தி யகங்களுக்கான டி.ஆர்.டி.ஓ.வும் இனி முக்கியத்துவம் பெறும்.
அதே சமயம், தளவாடத் தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஊழல்கள் நடப்பதைத் தடுப்பதிலும் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். தவிர, வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தளவாடங்களுக்கு இணையான நவீன தொழில்நுட்பம் கொண்ட தளவாடங்களைத் தயாரிப்பதையும், அவசரத் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்கள் தரமானவையாக இருப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும். இடைத்தரகர்கள், இந்திய நிலைக்கு ஒவ்வாத தொழில்நுட்பம்,
அதிகக் கொள்முதல் விலை, ஒப்பந்தப்படி ஆயுதங்களையும் சாதனங்களையும் வழங்குவதில் காலதாமதம் ஆகிய கோளாறுகளை நீக்குவது மிக முக்கியம். மேலும், வெளிப்படையான, நேர்மையான நடைமுறைகளைப் புகுத்தி, ராணுவத்தைக் குறுகிய காலத்தில் வலுப்படுத்த வேண்டியது அருண் ஜேட்லியின் முக்கியக் கடமை.
ராணுவத்தில் தற்சார்பு என்ற முடிவை நிச்சயம் வரவேற்கலாம். ஆனால், வரையறை இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதை விடுத்து, எல்லாத் துறைகளிலும் தற்சார்பு என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட வேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியம். அதை மட்டும் வசதியாக மறந்ததேன் மோடி அரசு?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT