Published : 22 Sep 2014 08:52 AM
Last Updated : 22 Sep 2014 08:52 AM

இந்தியர்களுக்கு இன்னொரு பாடம்

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் தொடரும் ஒரு பந்தம் மேலும் தொடரப்போகிறது என்ற சந்தோஷத்தில் பிரிட்டன் திளைத்துக்கொண்டிருக்கிறது.

ஸ்காட்லாந்துக்குச் சுதந்திரம் அளிப்பதுகுறித்து எடுத்த வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் (55%) பிரிட்டனுடன் இருப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதே அந்த சந்தோஷத்துக்குக் காரணம்.

ஸ்காட்லாந்து பகுதியில் வசிப்போர் எண்ணிக்கை மொத்தம் 53 லட்சம். அவர்களில் 42 லட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். 16, 17 வயதானவர்களுக்குக்கூட வாக்குரிமை தரப்பட்டிருந்தது. மொத்தம் 32 கவுன்சில்களில் 28 கவுன்சில்களைச் சேர்ந்த மக்கள் ஸ்காட் லாந்து பிரியக் கூடாது என்பதற்குப் பெரும்பான்மையாக வாக்களித் தனர். இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோது, ஸ்காட்லாந்து பகுதியில் மட்டுமல்லாமல், பிரிட்டனின் இதர பகுதிகளிலும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. பிரிட்டனில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களும் இந்த முடிவைக் கேட்டு நிம்மதியடைந்தனர். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற பிரிவினைக் குரல்கள் ஒலிக்கும் நேரத்தில், பிரிட்டன் பிளவுபட்டால் அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் மேற்கத்திய நாடுகளின் அணியையும் வலுவிழக்கச் செய்துவிடும் என்பதுதான் அதற்குக் காரணம்.

பிரிவினைக்கு எதிராகப் பெரும்பான்மையினர் வாக்களித்திருந்தாலும் ஆதரவாக வாக்களித்த 45 சதவீதத்தினரின் தரப்பையும் நாம் பார்க்க வேண்டும். தங்களுடைய இனத்தின் தனித்தன்மை அழிக்கப்படுகிறது, வளர்ச்சிக்குப் பொருளாதார மூலங்கள் கிடைப்பதில்லை, இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம், முக்கியப் பதவிகளுக்குத் தங்களை நியமிப்பதில்லை என்பதே பிரிவினைவாதிகளின் முறையீடு. தற்போது அவர்களுடைய பிரிவினை கோரிக்கை தோல்வியடைந்தாலும், பிரிட்டன் இனியும் இவர்களைப் புறக்கணித்துவிட முடியாது. அப்படிப் புறக்கணித்தால் எதிர்காலத்தில் நிலைமை அப்படியே மாறும் என்பதை பிரிட்டன் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

புவியரசியலில் வலிமை என்பது மேலும்மேலும் குறுகிக்கொண்டே போவதில் இல்லை. நாம் சார்ந்திருக்கும் நாடு வல்லமை பெற்றதாக இருக்க வேண்டியது இன்றைய புவியரசியலின் கள யதார்த்தத்தைப் பொறுத்த வரை மிகவும் முக்கியம். பெரும்பாலும் இது போன்ற பிரிவினைக் கோரிக்கைகள் வரலாற்றையும் பண்பாட்டையும் மட்டுமே அடிப்படை யாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், சம காலத்தையும் கணக்கில் கொள்வது அவசியம். இந்த அடிப்படையில் ஸ்காட்லாந்து மக்கள் அளித்த தீர்ப்பை இந்தியச் சூழலுடனும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவுடன் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், நிஜாம்கள் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டன. அந்தச் சேர்க்கை என்பது செயற்கையானது அல்ல. இயற்கையும் காலமும் சேர்ந்து நகர்த்திய ஒரு சேர்க்கை அது. எனவே, இந்தக் குடியரசை எவ்வளவு ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் நாம் வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்குச் சிறப்பாகவும் வலிமையாகவும் நாம் செயல்பட முடியும்.

மத்திய ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள், பாரபட்சமாக நம்மை நடத்துகிறார்கள் என்றால் அதையெல்லாம் எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும். ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாக அமைப்பையும் உருக்குலைக்கும் வகையில் பேசுவதும் செயல்படுவதும், நம் முன்னோரின் பல நூற்றாண்டுகளின் போராட்டங்கள் நமக்களித்த அற்புதமான அமைப்பை நாம் நாசப்படுத்துவதாகவே அமையும்? அந்த வகையில், ஸ்காட்லாந்து மக்கள் அளித்த தீர்ப்பு பல்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நம்மைப் போன்ற நாடுகளுக்கு ஒரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x