Published : 09 Sep 2014 09:32 AM
Last Updated : 09 Sep 2014 09:32 AM
இந்தியத் திருநாட்டில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியோ, ஐ.பி.எஸ். அதிகாரியோ பணியிட மாற்றம் செய்யப்படுவது பெரிய செய்தி அல்ல.
அதுவும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கென்று தனி அடையாளங்கள் அருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில். ஆனால், உ. சகாயத்தின் பணி மாற்றத்தை அப்படி எடுத்துக்கொள்ள முடியுமா? நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மௌனம் குற்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. நாட்டையே புற்றுநோயாக ஊழல் சூழ்ந்திருக்கிறது என்று கதறுகிறோம். எங்கும் லஞ்சம் என்று கூப்பாடு போடுகிறோம். ஆனால், ஒரு நேர்மையான அதிகாரி பாதிக்கப்படும்போது மௌனமாகத் திரும்பிக்கொள்கிறோமே, நம்முடைய சத்தியம்தான் எத்தனை சந்தர்ப்பவசமானது?
தன்னுடைய 23 ஆண்டு பணிக் காலத்தில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டு பந்தாடப்பட்டிருக்கிறார் சகாயம். அதுவும் சமீபத்திய பணிமாற்றங்கள் 48 மணி நேரத்துக்குள் இரண்டு முறை! அவர் செய்த குற்றம்தான் என்ன?
சகாயத்தின் கடந்த கால வரலாறு இது. காஞ்சிபுரத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தபோது மணல் திருட்டைத் தடுத்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனைக்கு வந்த மென்பானம் அசுத்தமாக இருந்ததாக நுகர்வோர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து விசாரித்து, அந்த நிறுவனத்துக்கே துணிந்து சீல் வைத்திருக்கிறார். மதுரையில் ஆட்சியராக இருந்தபோது, ரூ. 16,000 கோடி கல் குவாரி கொள்ளையை அம்பலப்படுத்தினார். எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ‘லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் உயர்த்து’என்று செயல்படுபவர் சகாயம் என்று மக்களே சொல்கிறார்கள். தன்னுடைய சொத்துக்கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்ட அதிகாரி அவர்.
தொடர் நஷ்டங்களால் நலிவடைந்து நின்றது கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு நெசவுத் துறை. ரூ. 11.5 கோடி நஷ்டத் தொகை அதை அழுத்தி நின்றது. நெசவாளர்களுக்குக் கிடைக்கும் சொற்பக் கூலிகூட உரிய நேரத்தில் சென்றடையவில்லை.
சகாயம் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே ரூ. 13.5 கோடியாக அதன் வருவாயை உயர்த்தினார். நஷ்டத்திலிருந்து மீட்டு ரூ. 2.5 கோடி நிகர லாபம் என்ற நிலைக்கு அதை உயர்த்தினார். வேட்டி தினம் முதல் திருக்குறள் படுக்கை விரிப்பு வரை அவர் கையாண்ட ஒவ்வொரு புது உத்திகளும் கோ - ஆப்டெக்ஸுக்குப் புது மரியாதையைப் பெற்றுத்தந்தன. இரு தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்தன. இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை நாம் கொண்டாட வேண்டாமா?
சகாயம் பந்தாடப்படுகிறார். தொடர்ந்து பந்தாடப்படுகிறார். இந்த முறை பின்னணியில் ஒரு அரசியல்வாதியின் பெயர் அடிபடுகிறது. சங்கதிகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; ஒரு திறமையான, நேர்மை யான அதிகாரி இப்படிப் பந்தாடப்படக் கூடாது. முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்.
மகாராஷ்டிரத்தின் அருண்பாடியா, ஆந்திரத்தின் பூனம் மால கொண்டய்யா, ராஜஸ்தானின் முக்டா சின்ஹா, மகாராஷ்டிரத்தின் ஜி.ஆர். கைர்னார், ஆந்திரத்தின் இ.ஏ.எஸ். சர்மா, ராஜஸ்தானின் சமீத் சர்மா, உத்தரப் பிரதேசத்தின் துர்கா சக்தி நாக்பால், ஹரியாணாவின் கெம்கா, தமிழகத்தின் உமாசங்கர், இப்போது சகாயம்... இவர்களெல்லாம் தனிமனித ஆளுமைகளாக மட்டும் நிற்கவில்லை. நம் சமூகத்தில் அறம் சார்ந்த விழுமியங்களின் மிச்சசொச்ச அடையாளங்களாகவும் நிற்கிறார்கள். சமூகம் இவர்களையெல்லாம் பாதுகாக்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT