Published : 12 Sep 2014 11:23 AM
Last Updated : 12 Sep 2014 11:23 AM
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது சாத்தியமா என்று மக்களும் அரசியல் கட்சிகளும் கேட்டதுபோக, உச்ச நீதிமன்றமே கேட்டிருக்கிறது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கங்கையைப் பொறுத்தவரை அரைகுறையாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும், போதிய அக்கறை இல்லாமலும்தான் இதுவரை செயல்பட்டிருக்கிறார்கள். இப்போது மட்டும் எப்படி வேறு விதமாகச் செயல்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உச்ச நீதிமன்றக் கேள்வியின் உண்மையான தொனி.
கங்கோத்ரி தொடங்கி மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பர் வரையில் கங்கை நீரில் கலந்திருக்கும் கிருமிகளின் அளவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் எல்லையைவிடப் பல மடங்கு இருக்கிறது. இந்த நீர் குடிக்க, குளிக்க, துணி துவைக்க மட்டுமல்ல;
விவசாயத்துக்குக்கூட ஆபத்தானது என்றே ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 11 மாநிலங்கள் வழியாகப் பாயும் கங்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 கோடிப் பேர் நம்பியிருக்கின்றனர். வாரணாசி, பாட்னா உள்பட 50-க்கும் மேற்பட்ட நகரங்கள் கங்கைக் கரையில் அமைந்துள்ளன.10,80,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை வளப்படுத்தும் கங்கையை அசுத்தப்படுத்துவதில் யாருக்கும் விதிவிலக்கில்லை.
தோல் தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகள், மதுபானத் தயாரிப்பு ஆலைகள், சர்க்கரை ஆலைகள், மருத்துவமனைகள் எல்லாம் தொழில்கழிவுகளைச் சிறிதும் குற்றவுணர்ச்சியின்றி இந்த ஆற்றில் கலக்கவிடுகின்றன. கங்கை நதிப் படுகைகளில் 600 பெரிய ஆலைகளும் நூற்றுக் கணக்கான சிறிய தொழில் பிரிவுகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கங்கைக் கரையில் அமைந்திருக்கும் நகரங்கள் எல்லாமே சாக்கடைக் கழிவுகளைக் கங்கையில்தான் சேர்க்கின்றன.
பொதுமக்களும் பக்தர்களும் தங்கள் பங்குக்குக் கங்கையை நாசப்படுத்துகின்றனர். இறந்த உடல்களையும் பாதி எரிந்த சடலங்களையும் கங்கையில் போட்டுவிடுகின்றனர். கங்கையைப் புனித நதியாகக் கருதுபவர்களே அதன் சீரழிவுக்குப் பாதைவகுப்பதுதான் பெரும் துயரம். கும்பமேளா போன்ற சமயங்களில் கோடிக் கணக்கில் கூடும் பக்தர்களால் கங்கையில் ஏற்படும் மாசுக்கு அளவே இல்லை.
கங்கை பாயும் பகுதிகளில் உயிர்ச் சூழல் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது. கங்கை நதி ஓங்கல் (டால்பின்) என்ற உயிரினம் அழியும் நிலையில் இருப்பது சுற்றுச்சூழலுக்கு ஊதப்பட்ட அபாயச் சங்கு. இயற்கை என்பது மிகவும் நுட்பமானது. அதில் எங்கே கைவைத்தாலும் பிரச்சினையாகும் என்பதற்கு அடையாளம்தான் ஓங்கல்களின் அழிவு.
இந்தியாவில் உள்ள மற்ற ஆறுகளின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள், இன்று சடலமாகத்தான் கிடக்கின்றன. சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொள்ளாமல் அரசும் தனியார் துறையும் நடத்திய சுரண்டலின் விளைவுதான் நதிகளின் மரணம். ஆற்றுப் பாசனத்தையும் மழையையும் நம்பியிருந்த இந்திய விவசாயம், இன்று நிலத்தடி நீரை நம்பி நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், நிலத்தடி நீரின் நிலையோ ஆறுகளின் நிலையைவிட மோசம்.
ஆற்று நீர், மழை நீர், நிலத்தடி நீர் இவையெல்லாம் சேர்ந்ததுதான் நீர் ஆதாரத்தின் சங்கிலி. இவற்றில் எது குறைந்தாலும் நாளைக்கு நாம் கனவில் மட்டுமே குடிநீரைப் பார்க்க முடியும். நீரைக் காப்பாற்றுவதன் மூலம்தான் எதிர்காலத்தை உறுதிசெய்துகொள்ள முடியும் என்பதை அரசு இப்போதாவது உணர வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT