Published : 21 Aug 2014 09:22 AM
Last Updated : 21 Aug 2014 09:22 AM
இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறும் பாகிஸ்தான் அரசு, அதைச் செயலிலும் காட்ட வேண்டும்.
சமீப நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் குண்டுச் சத்தம் அதிகரித்திருக்கிறது. இந்திய நிலைகள் மீதும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீதும் பீரங்கிகளால் சுடுவது, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து செல்லும்போது அவர்களைத் துப்பாக்கியால் சுட்டு வம்புக்கிழுப்பது என்று சீண்டிக் கொண்டேயிருக்கிறது பாகிஸ்தான் ராணுவம். இந்நிலையில், இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலர்கள் நிலையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்துவிட்டது. தொடர்ந்து, செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீபுடன் பேசுவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.
காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் ஹுரியத் அமைப்பின் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மீர்வாய்ஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் ஆகியோரை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஸித் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இருநாட்டு வெளியுறவுத் துறைச் செயலர்களின் சந்திப்புக்கு முன் பிரிவினைவாதத் தலைவர்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர்களைச் சந்திப்பதாக இருந்தால், ‘இருநாட்டு செயலர்களின் சந்திப்பில் அர்த்தமே இல்லை’ என்று இந்தியா கூறிய பிறகும் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
மக்களுடைய அமோக ஆதரவைப் பெற்று, பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்திருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுப்பது ராணுவமாகத்தான் இருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர்களான இம்ரான் கானும் தாஹிர் உல்-காத்ரியும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்துவிட்டதாகவும், மோசடியான தேர்தலில் வெற்றிபெற்றுப் பிரதமரான நவாஸ் ஷெரீப், அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, நீண்ட நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவு எப்படி இருக்கும், ராணுவம் யாரை ஆதரிக்கும் என்பதெல்லாம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் சூழலில்தான் இந்தக் காட்சிகளும் அரங்கேறுகின்றன.
இந்த விவகாரத்தில் இந்தியத் தரப்பை விமர்சித்து வெளியிடப்படும் கருத்துகள் நிதானமான, நடுநிலையான, தொலைநோக்குள்ள கருத்துகளாகத் தெரியவில்லை. காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட வேண்டியது என்பதிலோ, பிரச்சினையைத் தீர்க்கப் பேச்சு வார்த்தைகள் அவசியம் என்பதிலோ சந்தேகம் இல்லை. அதேசமயம், பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் நோக்குடனேயே கையாள வரும் பாகிஸ்தானுடன் எல்லாத் தருணங்களிலும் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை.
உள்நாட்டு நிலவரம் சரியில்லாத இந்தச் சூழலில், நவாஸ் ஷெரீப்பாலும் துணிச்சலாக எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது என்பதுதான் உண்மை. ராஜதந்திரத்தில் விட்டுக்கொடுத்தலும் ஒரு வியூகம், பின்வாங்கி முறுக்குதலும் ஒரு வியூகம். இப்போதைய சூழலில், பாகிஸ்தானை விட்டுப்பிடிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT