Published : 18 Aug 2014 09:36 AM
Last Updated : 18 Aug 2014 09:36 AM
பிரதமர் நரேந்திர மோடியின் முதல் சுதந்திர தின உரை வெற்று ஆர்ப்பாட்டம், வார்த்தை ஜாலங்கள் ஏதும் இல்லாமல் மனம் திறந்த பேச்சாகத்தான் இருந்தது.
பெரிய நம்பிக்கைப் பட்டியலையும், அதிரடி மாற்றங்களையும் முன்வைத்திருக்கிறார் மோடி. மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் அறிவித்திருப்பது யாரும் எதிர்பாராதது. மேலும், மின்னணுவியல், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இறக்குமதியை நம்பியிருக்காமல், உள்நாட்டிலேயே தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளைத் தொடங்கி, உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஏழைகள், வங்கியில் கணக்கு தொடங்க ஊக்குவிப்பாகக் கடன் அட்டையும், ஒரு லட்ச ரூபாய்க்கு இலவசக் காப்பீடும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை நிச்சயம் பாராட்டலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு, இளைஞர்கள் திறன்மேம்பாட்டுத் திட்டங்கள் என்று மோடியின் பட்டியல் நீள்கிறது.
பெண் சிசுக் கொலைக்கு எதிராகப் பேசியது, இன்னும் ஓராண்டுக்குள் எல்லாப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கென்று தனிக் கழிப்பறை ஏற்படுத்தப்படும் என்றும், எல்லாக் கிராமங்களிலும் கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என்றும் உறுதியளித்தது பிரதமர் உரையின் மிக முக்கியமான அம்சங்கள்! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெண்கள் மீதே குற்றச்சாட்டுகளைத் திருப்பிவிடுவதை விட்டுவிட்டு, அப்படிப்பட்ட குற்றங்களை இழைக்காத வகையில், உங்கள் வீட்டுப் பிள்ளைகளை வளருங்கள் என்று மோடி பேசியதை நிச்சயம் வரவேற்க வேண்டும்.
‘இந்தியாவிலேயே தயாரித்தது’ என்று பெருமையோடு சொல்லும் வகையில் நல்ல தரத்தில் பொருள்களைத் தயாரிக்க உற்பத்தியாளர்கள் உறுதியேற்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது என்றும் மோடி வலியுறுத்தியிருக்கிறார். மக்களவையிலும் மாநிலங் களவையிலும் ஒத்துழைப்பு தந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த அவர், பெரும்பான்மை வலுவால் அல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு நாட்டை முன்னெடுத்துச் செல்லவே விரும்புவதாகக் கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ஆக்கபூர்வமான எதிர்த்தரப்பு ஒன்று மக்களவையில் உருவாவதையும் மோடி அரசு ஆதரித்தால் நன்றாக இருக்கும்.
மத்திய அரசில் கோலோச்சிக்கொண்டிருந்த ஏராளமான குழுக் களையும் உயர் அதிகார அமைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மோடி கலைத்துவருகிறார். அதிகார மட்டத்தின் தேவையற்ற கெடு பிடிகள், ஊழல் போன்றவற்றையே கண்டு சலித்திருந்த மக்களுக்கு இது நல்ல செய்திதான். ஆனால், அதிகாரங்கள் வேறு எங்கும் மொத்தமாகக் குவிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் சுதந்திர தின உரைக்கும் இடையே சில மாற்றங்களைக் காண முடிகிறது. சாதி மோதல்களும் மதக் கலவரங்களும் வளர்ச்சிக்குப் பெரும் தடைக்கற்கள் என்று மோடி பேசியிருக்கிறார். எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு இந்தியாவையும் அவர் முன்மொழிந்திருக்கிறார்.
ஆக்கபூர்வமான உணர்வலைகளோடு மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது. வெறும் உரையோடு நின்றுவிடாமல், இந்த உத்வேகத்தைச் செயலிலும் தொடர்ந்து காட்ட வேண்டும். இந்தியா உங்களிடமிருந்து அதைத்தான் எதிர்பார்க்கிறது பிரதமர் மோடி அவர்களே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT