Published : 04 Apr 2014 10:02 AM
Last Updated : 04 Apr 2014 10:02 AM
“இந்தியா உள்ளிட்ட 11 தென் கிழக்காசிய நாடுகளில் 'போலியோ' எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது” என்று 'உலக சுகாதார நிறுவனம்' சான்றளித்திருக்கிறது. கோடிக் கணக்கான குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கிவந்த இந்த நோய், இப்போது கட்டுப்பட்டிருக்கிறது என்பது சற்றே ஆறுதலைத் தந்தாலும், இது மீண்டும் வராது என்ற நிலைமையை ஏற்படுத்தியே தீர வேண்டும்.
ஏனென்றால், பக்கத்து நாட்டில் இந்த நோய் இருந்தால் இது மீண்டும் பரவக்கூடிய தன்மை படைத்தது. பாகிஸ்தானில் ‘போலியோ’ இன்னமும் முற்றாக ஒழியவில்லை என்பதால், நாம் இரட்டிப்புக் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
அமெரிக்கா, மேற்கு பசிபிக், ஐரோப்பிய நாடுகளில் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு 'போலியோ' ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த நோயை 1988-க்குள் ஒழிக்க வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, அது முடியாமல் போனதால் 2000-வது ஆண்டுக்குள் ஒழித்துவிட வேண்டும் என்று அடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக 'போலியோ வைரஸ்' பரவுவதைத் தடுக்க வேண்டும், 2018-க்குள் உலகத்திலிருந்தே இந்த நோயை விரட்டிவிட வேண்டும் என்று புதிதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
2013-ல் உலகின் பல நாடுகளில் இந்த நோய்த்தொற்று, அதற்கு முன்பிருந்ததைவிட 82% அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே சமயம் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட நைஜீரியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் புதிதாக நோய் பாதிப்பு ஏற்படுவது முந்தைய ஆண்டைவிட பாதியாகக் குறைந்திருக்கிறது.
பாகிஸ்தானில் முந்தைய ஆண்டைவிட 60% அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் நம்மை அச்சுறுத்துகிறது. பாகிஸ்தானில் இருந்த வைரஸ், நைஜீரியாவிலும் மத்தியக் கிழக்கிலும் தலைகாட்டியிருப்பதாகச் சுயேச்சையான கண்காணிப்பு அமைப்பொன்று உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரிவித்திருக்கிறது.
இந்த வைரஸ் மேலும் பல நாடுகளுக்குப் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால், நெருக்கடிகாலக் கூட்டத்தை ஏப்ரல் மாதம் உலக சுகாதார அமைப்பு கூட்டியிருக்கிறது. இதன்படி, போலியோ உள்ள நாடுகளைச் சேர்ந்த எவரும் பிற நாடுகளுக்குச் செல்லும்போது கண்டிப்பாக போலியோ தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும். இதை இந்தியா ஏற்கெனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
உலகின் எந்தப் பகுதியில் இந்த வைரஸ் காணப்பட்டாலும், நம் நாட்டில் போலியோ ஒழிந்துவிட்டது என்ற நிம்மதியில் எந்த நாடும் இருக்க முடியாது. இன்னமும் சில நாடுகளில் போலியோ வைரஸ் இருப்பதால் இனி இந்த நோய் ஒழியவே ஒழியாதோ என்றும் பீதியடையத் தேவையில்லை.
இந்தியா எடுத்த தீவிர நடவடிக்கைகளால் ‘போலியோ’ ஒழிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், இந்த நோயை ஒழிப்பதற்கான உறுதியையும் வழிமுறைகளையும் எல்லா நாடுகளும் ஏற்றால் இது ஒழிக்கப்பட்டுவிடுவது நிச்சயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT