Published : 05 Aug 2014 09:14 AM
Last Updated : 05 Aug 2014 09:14 AM
எளிமையான பின்னணி கொண்ட ஒருவர், நாட்டின் மிக உயர்ந்த நிலைக்கு வருவதுதான் ஜனநாயகத்தின் அற்புதம். இந்தோனேசியாவின் அதிபராக ஜோகோ விதோதோ (53) தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பதை அப்படித்தான் சொல்ல வேண்டும்.
மரக் கடைக்காரரின் மகனாகப் பிறந்த ஜோகோ, செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணியோ, ராணுவத்தின் ஆதரவோ இல்லாத சாமானியர். மேகவதி சுகர்ணோபுத்ரி தலைமையிலான ‘இந்தோனேசிய ஜனநாயகக் கட்சி - போராட்டம்' (பி.டி.ஐ.-பி.) சார்பாகப் போட்டியிட்டு தற்போது வெற்றிபெற்றிருக்கிறார். பதிவான வாக்குகளில் 53.15% அவருக்குக் கிடைத்தது.
ஜோகோ விதோதோ 9 ஆண்டுகளுக்கு முன்னால் சோலோ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குற்றச் செயல்கள் அதிகமாகக் காணப்பட்ட அந்த நகரத்தில், ஜோகோவி பதவியேற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகளால் குற்றச் செயல்கள் குறைந்தன. போக்குவரத்து நெரிசலுக்கும் விடிவுகாலம் ஏற்பட்டது. நகரின் அடித்தளக் கட்டமைப்பு கள் மேம்பட்டன. சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நகரமாகவும் ஆகிவிட்டது. இதனால் மக்களிடையே அவருக்கு ஆதரவும் செல்வாக் கும் ஏற்பட்டது. 2012-ல் ஜகார்த்தா கவர்னர் பதவிக்குப் போட்டியிட்டு ஜோகோ வெற்றி பெற்றார். ஜகார்த்தாவின் பிரச்சினைகள் சோலோ நகரின் பிரச்சினைகளைவிடப் பெரியவை. ஆனாலும், அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். அவருடைய நேர்மையை யும் வெளிப்படையான நிர்வாகத்தையும் மக்கள் வரவேற்றனர்.
இந்த நிலையில்தான் அதிபர் தேர்தலில் அவரை பிடிஐ-பி கட்சி நிறுத்தி வெற்றிபெறச் செய்துள்ளது. அதிபர் பதவிக்கான தேர்தலில் பிடிஐ-பி கட்சித் தலைவர் மேகவதி சுகர்ணோபுத்ரி போட்டியிடாமல் ஒதுங்கிய பிறகே, அந்தக் கட்சியின் வேட்பாளரானார் ஜோகோ என்பது குறிப்பிடத் தக்கது.
ஜோகோவை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபாவோ சுபியாந்தோ ராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றியவர். ‘மகா இந்தோனேசிய இயக்கக் கட்சி' (ஜெரிந்திரா) சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்ததால், ஜோகோவிடம் தோற்க நேர்ந்ததாகவும் இது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் சுபியாந்தோ அறிவித்துள்ளார். ஆனால், தன்னுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் எதையும் அவர் தரவில்லை.
1998-ல் முடிவடைந்த சுகார்த்தோவின் சர்வாதிகார ஆட்சி, மீண்டும் தொடர்வதை மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரம்பரை ஆட்சியை மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர். சாதாரணக் குடும்பப் பின்னணியாக இருந்தாலும், நேர்மையாகவும் திறமையாகவும் செயல்படும் எவரையும் நாட்டின் உயர் பதவியில் அமர்த்த மக்கள் தயாராக இருப்பதையே இந்தோனேசியத் தேர்தலும் உணர்த்துகிறது.
560 உறுப்பினர்களைக் கொண்ட இந்தோனேசியப் பிரதிநிதிகள் சபையில், ஜோகோ விதோதோவை வெற்றிபெறச் செய்த பிடிஐ-பி கட்சிக்கு 207 உறுப்பினர்கள் மட்டும்தான் இருக்கின்றனர். எதிர்க் கட்சிக் கூட்டணிக்கு 353 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனவே, ஜோகோ விதோதோவுக்கு அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே சவால்கள் காத்திருக்கின்றன. ஊழலற்ற நிர்வாகம், மக்களுடைய நலனுக்கான முடிவுகள் என்று ஜோகோ ஆட்சி செய்தால், எதிர்க் கட்சிகளால் எதிர்க்க முடியாது என்பதே உண்மை.
இந்தோனேசியாவில் ஜனநாயகத் தென்றல் வீசுவது ஆசியா முழுவதற்கும் நல்லதொரு சமிக்ஞை எனலாம். இன்னும், ராணுவ ஆட்சி, முடியாட்சி என்று சிக்கிக்கொண்டிருக்கும் ஆசிய நாடுகள் சில இந்த சமிக்ஞையை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT