Last Updated : 26 Apr, 2018 09:21 AM

 

Published : 26 Apr 2018 09:21 AM
Last Updated : 26 Apr 2018 09:21 AM

பாஜகவை தோற்கடிப்பதற்கே முன்னுரிமை அளிப்போம்!: சீதாராம் யெச்சூரி பேட்டி

மா

ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வாகியிருக்கிறார் சீதாராம் யெச்சூரி. 2019 தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் இல்லா மல் இணைந்து பணியாற்றுவது என்ற யெச்சூரியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான தீர்மானமும் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2019 தேர்தலில் கட்சியின் வியூகம் தெளிவாகிவிட்ட நிலையில் உற்சாக மனநிலையில் இருக்கிறார் யெச்சூரி.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் வாக்கு வங்கி எதிரணிக்கு மாறியதைக் கணிக்கத் தவறிவிட்டதா?

எங்களைப் பொறுத்தவரை திரிபுரா தேர்தல் தோல்வி எதிர்பாராதது. பல ஆண்டுகளுக்கு முன்னரே திரிபுரா கல்வியறிவில் நாட்டின் முதல் இடத்தைப் பெற்றது (2013-ல் கேரளாவுக்கு முன்பாகவே). நாட்டின் பிற பகுதிகள் இருப்பதுபோல் உட்பகை சார்ந்த நெருக்கடிகள், மதவாத மோதல்கள், கலாச்சாரக் காவலர் மனநிலை ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிராத கல்வி பெற்ற ஆரோக்கியமான இளம் தலைமுறை அங்கு உருவாகியுள்ளது. இவையெல்லாம் அடுத்தடுத்து வந்த பிரதமர்களால் அங்கீகரிக்கப்பட்ட சாதனைகள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது இந்தத் தோல்வி எதிர்பாராதது. தேர்தலில் ஒருவர் வெல்வார், ஒருவர் தோற்பார். இதுதான் ஜனநாயகம். நாங்கள் மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்கிறோம்.

உங்கள் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?

மாநிலத்தில் இடதுசாரி எதிர்ப்பு துருவமாக பாஜக உருவானது. அவர்கள் காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சி களையும் விழுங்கிவிட்டார்கள். பாஜகவினர் எண்ணற்ற சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பழங்குடிகளுக்கு இந்தியாவுக்கு வெளியே தனி நாடு (திவிர்ப்ராலாந்து) கேட்ட தீவிரவாதப் பழங்குடிக் குழுவான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைத்துக்கொண்டனர். இப்போது அவர்களது நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை. பாஜக எழுப்பும் இந்துத்துவ தேசியவாதம் சார்ந்த முழக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவை இந்தக் குழுக்கள்.

அப்புறம், வாக்காளர்களிடம் வளர்ந்துகொண்டே போகும் அபிலாஷைகள். வட கிழக்கு மாநிலங்களில் வளங்கள் குறைவாக இருப்பதாலும் தொழில் துறை வளர்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு இல்லாமல் இருப்பதாலும், பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமில்லை. அபிலாஷைகள் வளர்ந்துகொண்டே போனாலும் மறுபக்கம் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் அமையவே இல்லை. அடுத்து, வாக்காளர் கள் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தனர்.

இந்தத் தோல்வி, நாட்டின் இதர பகுதிகளில், குறிப்பாகக் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எப்படிப் பாதிக்கும்?

திரிபுரா தேர்தல் நடந்து முடிந்த வேகத்தில் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக, முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே தோல்வியுற்றது. பிஹாரில், மகா கூட்டணிக்கு நிதீஷ் குமார் இழைத்த துரோகம் மக்களால் உறுதியாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் ராஜஸ்தானிலும் பாஜக தன் வசம் இருந்த இரண்டு தொகுதிகளை இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சியை அகற்ற முடியவில்லை. நீங்கள் மற்ற முன்னகர்வுகளையும் கணக்கில்கொண்டு பார்த்தால் தாக்கம் சமமானதாக இருக்கும்.

கேரள மாநில மாநாட்டில் உரையாற்றும்போது ‘சிபிஎம் என்பது கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் கேரளா (மார்க்சிஸ்ட்) அல்ல, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்சிஸ்ட்)’ என்று நீங்கள் பேசினீர்கள். இந்தக் குறுகல்வாதப் பார்வை கட்சியைப் பாதிக்கிறதா?

நான் அப்படிச் சொல்லவில்லை. ‘நான் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்’ என்றுதான் சொன்னேன். ஊடகங்கள், குறிப்பாகக் கேரள ஊடகங்கள் அதை அவர்கள் இஷ்டப்படி பொருள்படுத்திக்கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி, மையப்படுத்தப்பட்ட இந்தியா முழுவதற்குமான கட்சி.

கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய முடிவுகள், கட்சியின் குழுக்களால்தான் (கமிட்டி) எடுக்கப்பட வேண்டும். மத்தியக் குழு இறுதியாக எதை அங்கீகரிக்கிறதோ அதைத்தான் ஒட்டுமொத்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளும்.

மத்தியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்-தந்திரம் சார்ந்த நிலைப்பாடு ‘பாஜகவுக்கு எதிரான வாக்குகளின் குவியலை அதிகரிப்பதற்கு உரிய அரசியல் தந்திரங்கள் மேற்கொள்ளப்படும்’ என்கிறது. இதை வைத்து, தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் பாஜக ஆட்சியமைப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

எங்கள் அரசியல் நிலைப்பாட்டை அடியொற்றி, பாஜகவுக்கு எதிரான வாக்குகளின் குவியல் அதிகரிப்பதை உறுதிசெய்வதற்குரிய அரசியல் தந்திரங்களை மேற்கொள்வோம் என்று சொல்லியிருக்கிறோம். ஆர்எஸ்எஸ்ஸால் வழிநடத்தப்படும் பாஜக அரசை வீழ்த்துவதற்கே முன்னுரிமை என்பதே எங்களது அரசியல் நிலைப்பாடு.

கூட்டணிக்குக் கதவுகளைத் திறந்துவைப்பது என்ற உங்களது நிலைப்பாட்டை திரிபுரா தேர்தல் முடிவுகள் நியாயப்படுத்துவதாக நினைக்கிறீர்களா?

திரிபுராவில் சூழல் முற்றிலும் வேறானது. அங்கு இடதுசாரி-இடதுசாரி எதிர்ப்பு என்று இரண்டு துருவங்கள்தான். வேறெந்த சாத்தியங்களுக்கும் அங்கு இடம் இல்லை.

பெரும்பாலான மத்தியக் குழு உறுப்பினர்கள் பாஜக மீது மிதவாதப் போக்கைக் கடைபிடிப்பதாகவும் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்தால் கட்சியின் கேரளப் பிரிவு இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததே?

இவையெல்லாம் முற்றிலும் ஊகங்கள்; அவற்றை முன்வைப்பவர்களின் கற்பனையைத்தான் இது காட்டுகிறதே தவிர, உண்மை அல்ல. கள யதார்த்தம் குறித்த எங்களது புரிதல், கணிப்பின் அடிப்படையில் நிலைப்பாடுகளை எடுக்கிறோம். புறம் சார்ந்த காரணிகள் எதுவும் இல்லை.

மகாராஷ்டிர விவசாயிகள் பேரணி மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சித் தேர்தல் வெற்றிகளைவிட இது போன்ற வெகுமக்கள் இயக்கங்களைக் கட்டமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே?

மகராஷ்டிரப் பேரணி ஒரே நாளில் விளைந்ததல்ல. மூன்றாண்டு நெடிய திட்டமிடலுக்குப் பின் நடைபெற்றது. 2015 அக்டோபரில் எங்கள் கட்சியின் மகாராஷ்டிரக் குழு இதற்கான போராட்டங்களை நடத்த முடிவெடுத்தது. அந்தத் திட்டமிடலின் அடிப்படையில் மார்ச் 2016-ல் கடன் தள்ளுபடி, கொள்முதல் விலையை அதிகரிப்பது, அரசின் ஆதரவுடன் மீறப்படும் பழங்குடியினர் வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, ஒரு லட்சம் விவசாயிகள் நாசிக் நகரத்தை முற்றுகையிட்டனர். முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அரசாங்கம் ஆறு மாத அவகாசம் கேட்டது. அரசு, விவசாயிகளை ஏமாற்றினால் முற்றுகையிடப்படும் அடுத்த நகரம் மும்பையாக இருக்கும் என்று சொல்லியிருந்தோம். அதனால்தான் இந்தப் பேரணி நாசிக்கிலிருந்து மும்பைக்குச் சென்றது. 2017-ல் தனித்தன்மை வாய்ந்த வகையில், விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்தினர். அவர்கள் நகரங்களுக்குத் தங்கள் பொருட்களை விற்க மறுத்தனர். மாறாக, அவற்றைக் குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குக் கொடுத்தனர்.

அது பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றுத்தந்தது. ரூ.30,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு சொன்னது. ஆனால், பட்ஜெட் காட்டியது என்ன? ரூ.13,000 கோடி கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. மக்கள் போராட்டங்களையும் இயக்கங்களையும் வலுப்படுத்துவதற்கே மார்க்சிஸ்ட் கட்சி கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் வழியாக மக்களுக்கு மத்தியிலான எங்களது ஆதரவுத் தளத்தை அதிகரித்து, அரசியல் உறவுகளை மாற்றியமைக்க முயல்கிறோம். இது அரசியல் தந்திரங்களுக்கும் வெகுமக்கள் இயக்கங்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் அல்ல.

கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது பாஜகவின் லட்சியமாக இருக்கிறது. இந்திரா காந்தியின் காலத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி இதே போன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டது. இவை இரண்டுக்கும் இடையில் அதிக ஆபத்தானது எது என்று நினைக்கிறீர்கள்?

மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்தக் கட்சியும் மிகவும் ஆபத்தானதுதான். ஒரு காலத்தில் காங்கிரஸ் அப்படி இருந்தது; இப்போது பாஜக. இவை இரண்டுமே அதிகாரவர்க்கக் கட்சிகள். அதிகாரவர்க்கத்துக்குக் கம்யூனிஸ்ட்டுகள்தான் அடிப்படை எதிரிகள். பாஜகவுக்கு இன்னும் தீவிரமான எதிரிகள்.

இந்துராஷ்டிரமாக இந்தியாவை மாற்றுவதற்கு எதிராகச் செயல்படும் மூன்று உள்நாட்டுச் சக்திகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள்தான் என்று வெளிப்படையாகவே பாஜகவினர் அறிவித்துவிட்டார்கள். அவர்கள் சித்தாந்தரீதியிலும் நிலைத்தன்மையிலும் அமைப்புரீதியாகவும் எங்களைத்தான் முக்கியமான எதிரியாகக் கருதுகிறார்கள். இதனால்தான், “திரிபுராவில் இரண்டே இரண்டு மக்களவைத் தொகுதிகள்தான் உள்ளன என்றாலும், அங்கு சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனென்றால், அது பாஜகவின் சித்தாந்தத்துக்கான வெற்றி” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலுக்காகப் பல முரண்பாடுகள் நிறைந்த கட்சிகள் ஒன்றுகூடுவதாக நினைக்கிறீர்களா?

இந்திய அரசியலில் அனைத்து நதிகளிலும் ஏராளமான நீர் பாயும். பல்வேறு அணிசேர்தல்களும் அணிவிலகல்களும் இருக்கும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவார் என்றோ, ஒரு திராவிடக் கட்சி பாஜகவுடன் அனுசரணையாக இருக்கும் என்றோ, சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றிணைவார்கள் என்றோ யாராவது நினைத்திருப்பார்களா? அல்லது மகா கூட்டணிக்குத் தலைமை தாங்கிய நிதீஷ் குமார் அதிலிருந்து விலகி வாக்காளர்களால் நிராகரிக்கப்படுவார் என்றுதான் யாராவது நினைத்திருப்பார்களா?

மோடி அரசை 2019-ல் தோற்கடிக்க முடியுமா?

நான் இப்போதைய சூழலுக்கும் 2004 பொதுத் தேர்தலுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையைப் பார்க்கிறேன். அப்போது, சில மாநில சட்ட மன்றத் தேர்தல்களை வென்ற பிறகு, பொதுத் தேர்தலையும் எளிதாக வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அதை முன்கூட்டி நடத்த முடிவெடுத்தது பாஜக. 2004-ல் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த சூழல் என்ன? ‘இந்தியா ஒளிர்கிறது’, அனைத்தும் நன்றாக இருக்கிறது, எதிர்க்கட்சிகள் சீர்குலைந்துள்ளன என்றெல்லாம் நம்பவைக்கப்பட்டது. எனவே, வாஜ்பாய் மூன்றுக்கு இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். பாஜக தோற்கும் என்று யாருமே நினைக்கவில்லை. எங்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் நாட்டு நலனுக்கான ஆகச் சிறந்த முடிவை எடுப்பார்கள்!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில் சுருக்கமாக: ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x