Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM

சென்னையின் பொற்காலத்தை மீட்டெடுப்போம்!

சென்னை. உலகின் பழம்பெரும் மாநகராட்சிகளில் ஒன்று. தென்னிந்தியாவின் நுழைவாயில். சென்னை கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையம் ஆசியாவிலேயே பெரியது. அண்ணா பெயரிலான நூற்றாண்டு நூலகமும் ஆசியாவிலேயே பெரியது. உலகின் அழகிய நீண்ட கடற்கரையில் சென்னைக் கடற்கரையான மெரினாவின் இடம்

இரண்டாவது. உலகில் அவசியம் பார்க்க வேண்டிய 52 இடங்களில் இதுவும் ஒன்று. எல்லாவற்றுக்கும் மேல் தமிழகத்தின் தலைநகரம் மட்டும் அல்ல; வாய்ப்புகளின் நகரம்; கனவு நகரம்.

இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் நகரங்களில் ஒன்று. பிரம்மாண்டமான இந்திய கலைத் துறையின் முக்கியமான வாயில்களில் ஒன்று. சென்னையின் கிண்டி, அம்பத்தூர், ஒரகடம் தொழிற்பேட்டைகள் தொழில் துறையில் ஆசிய அளவில் சென்னையின் முக்கியமான இடத்தைச் சொல்லக் கூடியவை. மோட்டார் வாகனங்களையும் உதிரி பாகங்களையும் தயாரிப்பதில் இந்தியாவிலேயே முன்னணி நகரம். நாட்டின்

40% மோட்டார் வாகனத் துறை உற்பத்தி இங்கேதான் நடக்கிறது. மென்பொருள் ஏற்றுமதி, அயல்பணி ஒப்படைப்பு ஏற்றுமதியில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது. ஜவுளித்தொழில், பெட்ரோ ரசாயனத் தொழில், நிதித்துறைச் சேவை ஆகியவற்றிலும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஏறத்தாழ 426 கி.மீ. பரப்பளவுக்கு, 86 லட்சம் மக்கள்தொகையுடன் விரிந்திருக்கும் இந்நகரத்தின் நவீன வரலாற்றுக்கு வயது 375.

இந்த 375 ஆண்டுகளில், அது கடந்து வந்திருக்கும் பயணத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் புலப்படும். ஒன்று, தமிழகம் மட்டுமல்லாமல்,நாட்டின் ஏதோ ஒரு மூலையைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கைக்கும்கூட அது இடமளித்து அரவணைத்துக்கொள்ளும் நகரம். இரண்டு, அப்படி அரவணைத்துக்கொள்வதாலேயே பெருகும் மக்கள்தொகையால் சிதைந்துகொண்டிருக்கும் நகரம். சில தசாப்த ஆண்டுகளுக்கு முன்கூட இந்த நகரம் எவ்வளவு பசுமையானதாக, அற்புதமான நகரமாக இருந்திருக்கிறது! கடந்த கால் நூற்றாண்டுக்குள் எவ்வளவு நெரிசல் மிக்க, குப்பைகள் மிகுந்த, தூசியும் புகையும் சூழ்ந்த நகரமாக இது மாறிவிட்டது.

சென்னையில் ஒருநாளைக்கு சுமார் 4,500 டன் குப்பைகள் சேருகின்றன. இதிலும் 429 டன் பிளாஸ்டிக் குப்பைகள். வாகனங்கள் அதிகரித்துவிட்டன. விளைவாக, நகரின் காற்றில் நச்சுத்தன்மையும் அதிகரித்துவருகிறது. குடிநீர் ஆதாரங்கள் குறைந்துவருகின்றன. நகரில் மரங்கள், பறவைகள் குறைந்துவருகின்றன. பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் அரியனவாகிவிட்டன. நடைபாதைகள் வதைபாதைகள் ஆகிவிட்டன. சென்னை மாநகரம் இப்போது நோயாளிகளின் நகரமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் மிகுந்த நகரம் இது. இவையெல்லாம் ஒரு நகரம் நமக்கு என்ன கொடுத்திருக்கிறது, நாம் அந்த நகரத்துக்குப் பதிலுக்கு என்ன கொடுத்திருக்கிறோம் என்பதற்கான சான்றுகள்.

பொதுவாக, சென்னையைப் பற்றிப் பேசும்போது, வெளியூர்களிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள், இந்தநகரம் தங்களுக்கு அந்நிய நகரம் என்று அலுத்துக்கொள்வது இயல்பு. ஆனால், வந்தவர்களில் எத்தனை பேர் திரும்பியிருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு நடத்தினால், அவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருக்கும். மாறாக, இங்கு பூர்வகுடிகளாக இருந்த கடலோடி சமூகமும் விளிம்பு நிலையில் இருக்கும் குடிசை வாழ் மக்களுமே ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

சென்னையின் பழைய நாட்களைப் படங்களில் பார்ப்பவர்களுக்கு, ஏக்கப் பெருமூச்சைத் தவிர்ப்பது கடினம். ஆனால், கதை அதோடு முடியவில்லை. நாம் அந்த உயிரோட்டமான நாட்களை மீட்டெடுக்க வேண்டும். நம்மால் முடியும். ஒரு சென்னைவாசி அடிப்படையில் இது தன் ஊர் என்று முதலில் உணர வேண்டும். இந்த ஊருக்குத் தான் கடமைப்பட்டவர் என்றும் இந்த நகரின் சமகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் தானும் ஒரு பொறுப்பாளி என்று உணர வேண்டும். இந்த உணர்விலிருந்துதான் பழைய சென்னையை நாம் மீட்டெடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும். முதல் நடவடிக்கை வீதியில் ஒன்று, வீட்டுக்கு ஒன்று என்று ஆளுக்கு இரு மரக்கன்றுகளை நடலாம்.

தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் வெறும் பிழைப்புக்கான நகரமாகிவரும் இந்நகரை மீண்டும் வாழ்வதற்கான நகரமாக மீட்டெடுக்கும் காரியங்களில் இறங்க வேண்டும். இதற்கான திட்டங்களைத் தொலைநோக்குடன் நாம் தீட்ட வேண்டும். இன்றைக்கு இவ்வளவு பெரிய மாநகரத்தில், மனதுக்குப் பிடித்தமானவர்களுடன் நாளெல்லாம் நிம்மதியாக உட்கார்ந்து பேச எத்தனை இடங்கள் இருக்கின்றன? வீடுகள் மிகக் குறுகிவிட்ட சூழலில், தனி மனிதருக்கான வெளியைப் பொது இடங்களாவது தர வேண்டும் இல்லையா? ஒரு உயிர்ப்பான நகரத்துக்கு இதெல்லாமும் தேவை இல்லையா? நாம் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும். நம்முடைய தவறுகளை, பாதையை, ராட்சத வேகப் பயணத்தைப் பரிசீலிக்க வேண்டும். வெறும் வீடு மட்டுமே நிம்மதியான வாழ்க்கையைத் தந்துவிடுவது அல்ல. சுற்றிலும் சூழ்ந்திருக்கும் புகை, தூசு, குப்பைகள், கழிவுகளுக்கு இடையே நாம் எவ்வளவு கனமான கதவுகளைப் போட்டுக்கொண்டாலும் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியாது. நாம் கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும். நாம் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற தருணங்களையும் கொண்டாட்டங்களையும் உண்மையில் அதுதான் அர்த்தப்படுத்தும்.

சென்னை நமக்கு நிறைய நல்ல விஷயங்களைத் தந்திருக்கிறது. இனியும் அது தரும். மேலும், பல தலைமுறைகளுக்குத் தரும். அந்தக் காமதேனுவைப் பாதுகாப்பது நம் கடமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x