Published : 04 Aug 2014 12:00 AM
Last Updated : 04 Aug 2014 12:00 AM

இனியும் வாய் மூடி இருக்கலாகாது பிரதமர் மோடி!

தமிழக மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை நடந்துகொள்ளும் அணுகுமுறை உலகில் வேறு எந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாதது.

நெருக்கமான கடல் எல்லையைக் கொண்ட இரு நாடுகளிடையே கடலோடிகள் எல்லை தாண்டிச் செல்வது எங்கும் நடக்கக் கூடியது. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தப் பக்கம் எப்படி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்களோ, அதேபோல, அந்தப் பக்கம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், இலங்கை அரசைப் போல பாகிஸ்தான் அரசு கொடூரமாக நடந்துகொள்ளவில்லை. அதேபோல், இந்திய எல்லைக்குள் தவறி வரும் எந்நாட்டு மீனவர்களையும் நாம் கண்ணியமாகவே கையாள்கிறோம்.

இலங்கை அரசின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்திருக் கின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதும் அவர்களுடைய வலைகள், தளவாடப் பொருட்கள் சேதப் படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளன. தவிர, பறிமுதல் என்ற பெயரில் படகுகளைப் பறித்துக்கொண்டு செல்லும் அடாவடிச் செயலிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர் இலங்கைக் கடற்படையினர்.

இத்தகைய சூழலில், ஒரு மாநிலத்தின் முதல்வராக, பிரதமருக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியிருக்கிறார் ஜெயலலிதா. இதை அநாகரிகமான வார்த்தைகளில் அர்ச்சித்து, அருவருக்கத் தக்க சித்திரங்களை உடன் இணைத்துத் தன்னுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிடுகிறது என்றால், என்ன அர்த்தம்? அரசின் ஆசியின்றி நடக்கக் கூடிய காரியமா இது?

இன்றைக்கு அல்ல; பல ஆண்டுகளாக இது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

போர்க் காலகட்டத்தில், தமிழக அரசியல்வாதிகளைக் கேவலமான முறையில் சித்தரித்து, இலங்கைத் தரப்பில் வெளியிட்ட படங்களை யெல்லாம் தமிழகம் இன்னும் மறந்துவிடவில்லை. ஜெயலலிதா மீதான அவதூறுக் கட்டுரை, தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்கிற இலங்கையின் விளக்கமெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இந்த விவகாரத்தில், தமிழகக் கட்சிகளிடையே எழுந்துள்ள ஒற்றுமை அரிதானது. முக்கியமாக, திமுக தலைவர் மு. கருணாநிதி, தமிழக முதல்வருக்குத் தெரிவித்திருக்கும் தார்மிக ஆதரவு முக்கியமானது. தமிழக அரசியல் கட்சிகளிடம் இதுபோன்ற ஒருமித்த செயல்பாட்டைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் என்ற முறையில், இப்படியான ஆக்கபூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டிய கடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் உண்டு. அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை ஏனையோருக்கு உண்டு. தமிழக அரசியல்வாதிகளைக் கிள்ளுக்கீரையாகப் பிறர் அணுகக் காரணம், நம்மவரிடையே காணப்படும் ஒற்றுமையின்மைதான். இன்றைக்கும்கூட சட்டசபையில் நிலவும் ஆரோக்கியமற்ற சூழலை மக்கள் கவலையோடுதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக, ஒரு படிப்பினையாக இந்த விவகாரம் அமையட்டும்.

பிரதமர் மோடி இனியும் வாய் மூடி இருக்கலாகாது. இலங்கைத் தூதரை அழைத்து, இந்தியா தன் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இந்தியாதான் என்றைக்கும் இலங்கையின் முதல் ஆபத்பாந்தவன் என்பதையும் இந்த உறவுச் சங்கிலியின் முக்கியமான கண்ணி தமிழகம் என்பதையும் இலங்கைக்கு உணரவைக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x