Published : 09 Apr 2014 08:40 AM
Last Updated : 09 Apr 2014 08:40 AM
‘ரோடா-வைரஸ்' என்ற கிருமியால் பரவும் கொடிய நோய்க்கு டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் டாக்டர் மகராஜ் பான் என்பவரின் தீவிர முயற்சியால் 30 ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள 13 அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் அவருக்கு இதில் ஒத்துழைப்பை நல்கியுள்ளன. 1985 முதல் அந்த டாக்டர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். முதல்முறையாக இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுத் தொடர் ஆய்வு மேற்கொண்டதில் 56.4% இது வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பு ஊசி போடப்படுவது மேலும் அதிகரித்தால், இந்த நோயைக் கட்டுப்படுத்திக் கோடிக் கணக்கான இளம் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிவிடலாம்.
குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயதுக்குள்ளாக இந்த ரோடா வைரஸ் தீவிரமாகத் தாக்கும். காய்ச்சல், வயிறு அல்லது குடல் வீக்கம் இதன் அறிகுறிகள். குழந்தை வாந்தி, பேதியால் உடலின் நீர்ச்சத்தைக் கணிசமாக இழந்துவிடும். குளிர்காலத்தில்தான் இந்த வைரஸ் அதிகம் தாக்கும். இந்த வைரஸ்கள் 'ஏ' முதல் 'ஜி' வரை பல பிரிவுகளாகப் பகுத்தறியப்பட்டுள்ளன. மலப் பரிசோதனை மூலம்தான் தொற்றைக் கண்டுபிடிக்க முடியும். சுகாதாரமற்ற இடங்கள் இந்த வைரஸ் பெருகக் காரணம். ஒரு குழந்தையின் மலத்திலிருந்து இன்னொரு குழந்தைக்கு இந்த வைரஸ் பரவும். சமையல் செய்கிறவர்கள் கைகளைக் கழுவிச் சுத்தம் செய்யாமல் தின்பண்டங்களைத் தயாரிக்கும்போதும் இது பரவும்.
இந்த நோய்க்கு ஆண்டுதோறும் உலகெங்கும் சுமார் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை குழந்தைகள் பலியாகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஏழைகள். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததாலேயே உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு வயதுக்கும் குறைவான சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் இந்தக் கிருமியால்தான் இறக்கின்றனர். உலகில் இந்நோயால் இறக்கும் இளம் சிசுக்களில் 25% இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 5 வயது வரையில் உள்ள குழந்தைகளை இந்த வைரஸ் தாக்கும். இந்தத் தடுப்பு மருந்தை வேலூர் சி.எம்.சி. உள்பட மூன்று மையங்களில் குழந்தைகளுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்து, இது பாதுகாப்பானது என்ற சான்று பெறப்பட்டிருக்கிறது. இப்போது இதன் விலை சுமார் 60 ரூபாய்தான். அரசே இதைத் தடுப்பு ஊசிகளுடன் சேர்த்துப் போடும் இயக்கத்தைத் தொடங்கினால், கணிசமான உயிரிழப்பைத் தடுத்துவிடலாம். நாளடைவில் இந்த வைரஸினால் ஏற்படும் பாதிப்பையே குறைத்துவிடலாம்.
ரோடா-வைரஸ் காய்ச்சலுக்குச் சில தடுப்பு மருந்துகள் இருந்தாலும் ‘116-இ' என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பு மருந்துதான் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க 30 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தாலும் இப்படிப்பட்ட அரிய செயல்களை இந்தியர்களாலும் செய்ய முடியும் என்று உலகுக்குக் காட்டியிருக்கிறோம். இந்த வெற்றி மாபெரும் மக்கள் இயக்கமாக உலகெங்கும் பரவி, கோடிக் கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT