Published : 09 Jul 2014 09:10 AM
Last Updated : 09 Jul 2014 09:10 AM

முன்னேறுகிறோமா நாம்?

ஒவ்வொரு ஆண்டும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை வெளியாகும்போதெல்லாம் நெஞ்சம் பதறுகிறது. சக மனித உயிரொன்றுக்கு வாழ்வுரிமையை உறுதிசெய்ய முடியாத நாமெல்லாம் அறிவு முதிர்ச்சியைப் பற்றியும் சமூக வளர்ச்சியைப் பற்றியும் பேசுவதில் என்ன பயன் உண்டு என்று தெரியவில்லை. கடந்த 2013-ல் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 27% அதிகரித்துள்ளன. பாலியல் தொல்லைகள் 56% அதிகரித்துள்ளன. பாலியல்ரீதியிலான அலைக்கழிப்புகள் 37% அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டில் மொத்தம் 33,707 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, 15 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில். 94% சம்பவங் களில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஆண், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள்தான். சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவது 45% அதிகரித்திருக்கிறது. பெண்ணை அவளுடைய கணவர், மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமைப்படுத்தும் கொடுஞ் செயல்கள்தான் மகளிருக்கு எதிரான குற்றச் செயல்களில் 38% ஆக இருக்கிறது. பாலியல் வல்லுறவு, பாலியல் தொல்லை, கடத்தல் ஆகியவை அடுத்தடுத்த இடத்தைப் பிடிக்கின்றன.

தேசத்தின் தலைநகர் டெல்லி, பாலியல் வன்முறைக் குற்றப் பதிவில் முதலிடத்தில் இருக்கிறது. பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கை நாட்டிலேயே டெல்லியில்தான் அதிகம். ஒரு லட்சம் பெண்களில் 18.63 பேர் என்ற கணக்கில் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் மகளிருக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. 2012 உடன் ஒப்பிடும்போது, இது 60% அதிகரித்துள்ளது. இதேபோல, அவர்கள் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுவதும் இரட்டிப்பாகியிருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு புள்ளிவிவரம் உண்டு. அது குற்றவாளிகளின் தண்டனை புள்ளிவிவரம். பொதுவாக, டெல்லி சம்பவத்துக்குப் பிறகு காவல் நிலையத்தை நோக்கிப் பெண்கள் குற்றங்களை எடுத்து வருவதிலும், குற்றங்களைப் பதிவுசெய்வதிலும் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக் கிறது. இப்படியான பதிவில் கேரளம் முதலிடத்தில் இருக்கிறது. இதேபோல, பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகுபவர்

களைக் கைதுசெய்யும் விகிதமும் அதிகரித்திருக்கிறது. 2012-ல் வெறும் 7.8% இருந்த கைதுகள் இப்போது 42.8% ஆக அதிகரித் திருக்கின்றன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது ஒரு சின்ன முன்னேற்றத்துக்குப் பிறகும் 27% தாண்டவில்லை. ஒரு பாலியல் குற்றத்தை சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் எப்படியெல்லாம் உள்வாங்கு கின்றன என்பதற்கான உதாரணங்கள் இவை.

இந்தியாவின் மனம் ஆண் மனமாக இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மாறவேபோவதில்லை என்பதைத்தான் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன இந்தக் கணக்குகள். பள்ளிக்கூடங்களில் தொடங்க வேண்டிய வேலையைப் பல்கலைக்கழகங்களில்கூடக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பதே செய்தி. பட்டங்கள், தொழில்நுட்ப வசதிகள், பொருளாதார வளர்ச்சி போன்றவை அல்ல ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றக் குறியீடுகள்; சக மனுஷியின் சந்தோஷமான சுதந்திரமான வாழ்க்கையில்தான் அது இருக்கிறது.

இதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்? ​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x