Published : 07 Jul 2014 12:03 PM
Last Updated : 07 Jul 2014 12:03 PM

எது உண்மையான விளையாட்டு?

ஒரு திருமண வீட்டில் நடக்கும் கொலையைப் போல அரங்கேறியிருக்கிறது உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்தில் நெய்மாரின் வெளியேற்றம். கோப்பையை வெல்லக்கூடிய அணியாக எதிர்பார்க்கப்படும் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாருக்கு ஆட்டத்தின்போது ஏற்பட்ட முதுகெலும்பு முறிவு, திட்டமிட்ட சதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கொலம்பிய அணியின் ஆட்டக்காரர் ஹ்வான் ஜுனிகா, நெய்மாரின் முதுகில் தன்னுடைய வலது காலால் உதைத்துக் காயப்படுத்தும் புகைப்படம் ஒட்டுமொத்தக் கால்பந்தாட்டத்துக்கே அவமானச் சின்னம் என்றால் மிகையல்ல.

கோப்பையை வெல்வதற்கு ஒருவர் மட்டுமே போதாது என்றாலும் ஒவ்வொரு அணிக்கும் யாராவது சிலர் உந்துசக்தியாக, குவிமையமாகச் செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட வீரர்களைக் குறிவைத்துத் தாக்குவதும் முடக்குவதும் எத்தனை கயமைத்தனமான செயல்? ஆனால், இப்படித் தாக்குவதை ஓர் உத்தியாகவே கையாள வீரர்களும் அணிகளும் பழக்கப்படுத்தப்படுகின்றனர் என்றால் அது வெட்கக்கேடு இல்லையா?

கொலம்பியா-பிரேசில் ஆட்டத்தை நுட்பமாகக் கவனித்தவர் களுக்கு ஒரு விஷயம் தெரியும். பிரேசிலின் நட்சத்திர நாயகன் நெய்மாரை, கொலம்பிய வீரர்கள் எப்படிக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார்களோ... அதேபோல, கொலம்பிய நட்சத்திர நாயகன் ஜேம்ஸ் ரோட்ரிகஸை பிரேசில் வீரர்களும் முறைவைத்துத் தாக்கிக்கொண்டேயிருந்தனர். இதனால், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்துக்குள் பலரால் தாக்கப்பட்டு விழுந்த அவர் களத்தை விட்டே வெளியேறினார். அதே உத்தியை கொலம்பியா கையாளத் தொடங்கியதன் விளைவு நெய்மாரின் பரிதாபகரமான வெளியேற்றம். பிரேசில் பயிற்சியாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி ஒருமுறை அணி வீரர்களிடம், “எதிர் அணியின் சிறந்த வீரர்களின் கால்களை உதைத்து முடமாக்குங்கள்” என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்ததைத் தொலைக்காட்சி நிருபர்கள் பதிவுசெய்து அம்பலப்படுத்தியது இங்கே நினைவுகூரத் தக்கது. ஒரு விளையாட்டை இதைவிடவும் கொச்சைப்படுத்த முடியுமா? கொடுமை என்னவென்றால், நடுவர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பவர்களாக மாறிக்கொண்டிருக் கிறார்கள்! இந்த ஆட்டத்தி லேயேகூட நெய்மார் அடிபடும்வரை 41 முறை ஃபவுல்களைக் கடுமையாகத் தண்டிக்காமல் அனுமதித்தார் ஆட்ட நடுவர் வெலாஸ்கோ.

ஒரு நல்ல விளையாட்டுக்கும், நல்ல விளையாட்டு வீரருக்குமான உதாரணம் எது? ஸ்பெயினில் 2012-ல் நடந்த ஓர் ஓட்டப்பந்தயம் இங்கு நினைவுகூர வேண்டியது. இரு வீரர்கள் இவான் ஃபெர்னாண்டஸ் அனயா, அபெல் முத்தாய் - வெற்றிக்கோட்டை நெருங்கிக்கொண்டிருக் கிறார்கள். முதலில் வந்துகொண்டிருந்த அபெல் முத்தாய் ரசிகர்களின் ஆரவாரத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, தான் வெற்றிக்கோட்டை எட்டிவிட்டதாகக் கருதி, ஓட்டத்தின் வேகத்தை அப்படியே குறைக்கிறார். பின்னால் ஓடிவரும் இவான் ஃபெர்னாண்டஸ் இதைக் கவனிக்கிறார். நினைத்தால், கண நேரத்தில் அபெல் முத்தாயைக் கடந்து அவர் பரிசைத் தட்டிச்சென்றிருக்கலாம். மாறாக, அபெலைப் பார்த்து “ஓடு… வெற்றிக்கோட்டை இன்னும் தொடவில்லை நீ” என்று குறிப்பால் உணர்த்தி அபெலின் வெற்றிக்குக் காரணமாகிறார். விளையாட்டின் உண்மையான வெற்றி இதுதான். உலகக் கோப்பையை பிரேசில் வெல்லலாம்; ஆனால், கால்பந்தாட்டத்தை அவர்களும் சேர்ந்து தோற்கடித்துவிட்டனர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x