Published : 15 Dec 2017 10:49 AM
Last Updated : 15 Dec 2017 10:49 AM
நே
பாள நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. அந்நாட்டைப் பொறுத்தவரை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் முறையும், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் இணைந்துதான் நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் என்பது இறுதியாக அறிவிக்கப்படும். இருந்தாலும், நாடாளுமன்றத்தின் 165 நேரடித் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70% இடங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. 110 இடங்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படை யில் நிரப்பப்படவிருக்கின்றன. 1990-ல் நேபாளம் மன்னராட்சியில் இருந்து, ஜனநாயக நாடானதற்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளுக்கு மகத்தான வெற்றி கிடைத்திருப்பது இதுவே முதல் முறை!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போதே ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி தனிப்பட்ட முறையில் அதிக இடங்களில் வென்றது நினைவுகூரத்தக்கது. மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்ததால் ஒரே சித்தாந்தத்தைக் கொண்ட கட்சிகளின் வலுவும் கூடியது. ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி தன்னுடைய வழக்கமான கோட்டைகளான மலை நகரங்களுக்கும் அப்பால் தராய் சமவெளியிலும், மேல்மலைப் பகுதிகளிலும் செல்வாக்கை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. 2008-ல் அரசியல் சட்ட வகுப்புக்கான பேரவை அமைக்கப்பட்டதிலிருந்தே தேர்தல்களில் தடுமாறிக்கொண்டிருந்த மாவோயிஸ்ட் கட்சி, இரண்டாவது இடத்தை இந்தத் தேர்தலில் பிடித்து தன்னுடைய சரிவைக் கட்டுப்படுத்திவிட்டது.
நேபாளி காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்த மாதேசி கட்சிகளும், முன்னாள் மன்னருக்கு விசுவாசிகளான கட்சிகளும்கூட இந்து மத அடையாளத்தைக் கொண்டு தேர்தலில் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இந்நிலையில், நேபாளி காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தற்போது அக்கட்சியின் முக்கியப் பணி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதுதான்.
நேபாளத்தில் 1990 முதல் இதுவரையில் 13 பேர் பிரதமர் பதவியில் அமர்ந்துவிட்டனர். அரசியலில் ஸ்திரத்தன்மையே நிலைகுலைந்துவிட்டது. நிலையான அரசுக்காக மக்கள் ஏங்கியிருந்த நிலையில், இடதுசாரிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒரே அணியாகப் போட்டியிட்டதால் மக்களுடைய ஆதரவு அதிகரித்தது. மன்னராட்சி யின் கீழ் இருந்த நேபாளம், குடியரசாக மலர வேண்டும் என்றபோது, அனைவருமே திரண்டு ஆதரித்தனர். நேபாள அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே சமரசப் பேச்சு நடந்தபோதும் அதே போன்ற ஆதரவு திரண்டது. 2015-ல் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேறுபாடுகளை மறந்து மீட்பு, நிவாரணப் பணிகளில் இணைந்து செயல்பட்டன. ஆனால், அரசு நிர்வாகம் யார் கையில் என்ற பூசலில் இந்த ஒற்றுமை குலைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரும்பான்மை வலிமை கிடைத்திருக்கும் நிலையில், நிர்வாகத்தில் இனி இடதுசாரிகள் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நேபாள மக்கள் நீண்டகாலமாகக் காத்திருப்பது அதற்காகத்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT