Published : 18 Jul 2014 09:11 AM
Last Updated : 18 Jul 2014 09:11 AM
வேட்டியும், அதையொட்டிய கலாச்சார விவாதங்களும்தான் இந்த வாரம் தமிழக அரசியல் களத்தின் மையம். இந்திய அளவிலும் இந்தப் பிரச்சினை அனல்பறக்க விவாதிக் கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மன்றத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு, வேட்டி கட்டி வந்தார்கள் என்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பிறகுதான் இவ்வளவு புயலும். எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் குதித்தன. சட்டப் பேரவையிலும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவை விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வாசித்து, தமிழ்நாட்டில் உள்ள எந்த சங்கத்திலும் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் முரணான விதிகள் சேர்க்கப்படாமல் இருக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். சென்னை கிரிக்கெட் சங்கத்தின் மன்ற விதிகளில், வேட்டி அணிந்துவரக் கூடாது என்று குறிப்பாக எதையும் தெரிவிக்கவில்லை என்ற தகவலையும் பேரவையில் வாசித்திருக்கிறார் முதல்வர்.
குறிப்பிட்ட அமைப்புகளின் விதிமுறைகளில் தலையிட முடியாது என்று இருந்துவிடாமல் முதல்வர் இந்தப் பிரச்சினையில் தலை யிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
‘நாமெல்லாம் தனியார் அமைப்புகள், வல்லான் வகுத்ததே சட்டம், இதில் யாரும் தலையிட முடியாது’ என்ற நினைப்பில் இருப்பவர்களின் தலையில் வைக்கப்பட்டிருக்கும் குட்டு இது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும் என்ற கேள்வி இந்தத் தருணத்தில் எழுகிறது.
ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டுச்சென்று 67 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் காலனியாதிக்க எச்சங்களோ விடாப்பிடியாக நம்மைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. ‘கிளப்’ போன்ற மேல்தட்டு வர்க்கத்தினர் வந்துபோகும் இடங்களில் ஆங்கிலேய மனோபாவம் ஆக்கிரமித் திருப்பது ஆச்சரியமல்ல. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என்று நம் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் காலனியாதிக்கம் தன் நீட்சி களை வேர் பரப்பியிருக்கும்போது ‘கிளப்’களை என்னவென்று சொல்வது? காலனியாதிக்கம் விட்டுச்சென்றவற்றில் தற்காலத்துக்குப் பொருந்தக்கூடியவையும், நமக்குப் பயன் அளிக்கக்கூடியவையும் இருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால், பெரும் பாலான விஷயங்கள் எந்த அர்த்தமுமில்லாமல் சடங்குரீதியாகப் பின்பற்றப் படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது. மழலையர் பள்ளிகளில்கூட குழந்தைகள் ‘டை’ கட்டிவர வேண்டும் என்பதும், ஷூ அணிந்துவர வேண்டும் என்பதும் கட்டாயமாக இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? அதேபோல, பட்டமளிப்பு விழாக்கள் இன்னும் விக்டோரியா மகாராணி காலத்தைத் தாண்டவில்லையே, அதை என்னவென்று சொல்வது? கல்லூரிகளை நகலெடுத்துப் பள்ளிகளிலும்கூட கருப்பு அங்கிகளை அணிய வைத்து மாணவர்களுக்கு ‘மாதிரி பட்டமளிப்பு’ விழாக்களை நடத்தும் அபத்தங்களும் பெருமளவில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
காலனியாதிக்க மனோபாவத்தின் ஆணிவேர் ஆங்கிலக் கல்வி மோகம்தான். அதற்கான, சல்லி வேர்கள்தான் மேற்கண்ட நடைமுறைகள். ஆணிவேரை அசைப்பதற்கு முன் சல்லிவேர்களைக் களைந்தாக வேண்டியதுதான் நாம் ஆரம்பிக்க வேண்டிய இடம். அதையும் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment