Published : 07 Aug 2023 06:21 AM
Last Updated : 07 Aug 2023 06:21 AM

குனோவின் சிவிங்கிப்புலிகள்: தேவை தொலைநோக்குப் பார்வை!

மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில், 2022 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சிவிங்கிப்புலிகள் தொடர்ந்து இறந்துகொண்டிருப்பது கவலையளிக்கிறது. ஆகஸ்ட் 2 அன்று சிவிங்கிப்புலி ஒன்று இறந்ததை அடுத்து, இறந்துபோன சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது.

ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு 2009இல் முன்மொழிந்தது. அதைத் தொடர்ந்து ரூ.39 கோடி மதிப்பீட்டில், ‘சிவிங்கிப்புலி செயல்திட்டம்’ 2021இல் வெளியிடப்பட்டது. தேசியக் காட்டுயிர்ச் செயல்திட்டத்தின் (2017-2031) பல்வேறு கானுயிர்ப் பாதுகாப்பு அம்சங்களைச் சுட்டிக்காட்டி அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, தன் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

முதல் கட்டமாக நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகளும் (5 பெண், 3 ஆண்); இரண்டாம் கட்டமாக (பிப்ரவரி 18, 2023) தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகளும் (7 ஆண், 5 பெண்) விமானத்தில் கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு சிறப்பு குழுவினரின் மேற்பார்வையில் சிவிங்கிப்புலிகள் கண்காணிக்கப்பட்டுவந்த நிலையில், மார்ச் 27 அன்று சிவிங்கிப்புலி ஒன்று இறந்துபோனது. ஷாஷா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தச் சிவிங்கிப்புலி, சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

மார்ச் 29 அன்று, ஜூவாலா என்கிற சிவிங்கிப்புலி நான்கு குட்டிகளை ஈன்றது; அதில் மூன்று குட்டிகள் இறந்துபோயின. இவற்றைத் தொடர்ந்து, உதய் (ஏப்ரல் 24), தக்‌ஷா (மே 9), தேஜஸ் (ஜூலை 11), சூரஜ் (ஜூலை 14) என சிவிங்கிப்புலிகள் தொடர்ச்சியாக இறந்துபோயின. இந்தப் பின்னணியில், தற்போது மீண்டும் ஒரு சிவிங்கிப்புலி இறந்திருப்பது (ஆகஸ்ட் 2) அதிர்ச்சியையும் திட்டத்தின் நிலைத்தன்மை குறித்த அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வேட்டை மட்டுமின்றி, கரடுகள், புல்வெளிக் காடுகள் என சிவிங்கிப்புலிகளின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதும் இந்தியத் துணைக்கண்டத்தில் அவை அற்றுப்போனதற்கு முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுமானம், சாலை வசதி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் புல்வெளிப் பகுதிகள், காடுகள் இன்றும் அழிக்கப்பட்டுவருகின்றன.

புல்வெளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்திய ஓநாய், வெளிமான், சிங்காரா, கானமயில் போன்ற பல உயிரினங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்காமல், ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் தேவை என்ன என்பது குறித்த கேள்விகள் எழுந்தன. இத்திட்டம் மிகவும் பலவீனமான அறிவியல் அடித்தளத்தைக் கொண்டிருப்பதாக, காட்டுயிர்ப் பாதுகாப்புச் செயல்பாட்டாளர்கள் விமர்சித்துவந்தனர்.

தேசியக் கானுயிர்ப் பாதுகாப்பு முன்னுரிமைகளை விடுத்து, நடைமுறைச் சாத்தியமில்லாத – ஊதிப் பெருக்கப்பட்ட கானுயிர்ப் பாதுகாப்புக் கனவுகளை முன்மொழிவதாகவும், முன்னுரிமை தரப்பட வேண்டிய கானுயிர்ப் பாதுகாப்புப் பிரச்சினைகள், வளங்களைப் பாதுகாக்கும் கவனத்திலிருந்து விலகச்செய்வதாகவும் அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் தர்க்கபூர்வமானவை.

சிவிங்கிப்புலிகள் தொடர் இறப்புகள் இத்திட்டத்துக்கு மிகப் பெரிய பின்னடவைக் கொண்டுவந்திருக்கும் நிலையில், இது குறித்த மத்திய அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பொதுச் சமூகத்தின் எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x