Published : 28 Jul 2014 10:06 AM
Last Updated : 28 Jul 2014 10:06 AM
டெல்லியில் உள்ள 'மகாராஷ்டிர சதன்' விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்துகொண்ட விதம் நாட்டையே கொதிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. என்ற ரயில்வே துறையின் துணை நிறுவனம்தான் மகாராஷ்டிர சதனிலும் உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. அங்கே தங்கியிருந்த சிவசேனை மக்களவை உறுப்பினர்கள், உணவுகுறித்து விருந்து இல்லத்தின் மேலாளரிடம் பிரச்சினை செய்திருக்கிறார்கள். அதோடு, அந்த உணவகப் பிரிவின் கண்காணிப்பாளரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர் ஒரு முஸ்லிம். ரமலான் நோன்பில் இருந்திருக்கிறார். இதை அறிந்தும், "இந்த சப்பாத்தி எப்படி இருக்கிறது என்று நீ சாப்பிட்டுப்பார்" என்று அவர் வாயில் திணித்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானபோது நாடே அதிர்ந்தது.
அந்த இளம் மேலாளர் சீருடையில், தன்னுடைய பெயரைத் தெரிவிக்கும் பட்டையுடன்தான் இருந்திருக்கிறார். "இது நோன்பு மாதம், சாப்பிட முடியாது" என்று மரியாதையுடன் அவர் கூறிய நிலையிலும் ராஜன் விசாரே என்ற சிவசேனை மக்களவை உறுப்பினர் ஆக்ரோஷமாக அவருடைய வாயில் சப்பாத்தியைத் திணிக்கும் காட்சியைச் சகித்துக்கொள்ளவே முடியாது. நாடு முழுவதும் கடும் கண்டனங்களை இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிகூட கண்டித்திருக்கிறார். ஆனால், பெரும்பாலான பாஜக, சிவசேனா தலைவர்களோ, "சாப்பாடு சரியில்லை என்றுதான் புகார் செய்தார்கள், அவர் முஸ்லிம் என்று தெரியாமல் செய்துவிட்டார்கள்" என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவது ஒரு அநீதிக்கு உடன்போவது மட்டுமல்ல, வெட்கக் கேடும் ஆகும்.
சிவசேனை போன்ற கட்சிகள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வது இன்று நேற்றல்ல, பால் தாக்கரே காலத்திலிருந்தே தொடர்கிறது. முதலில் தென்னிந்தியர்களைத் தாக்கினார்கள். தங்களுக்கு எதிராகச் செய்தி வெளியிட்டார்கள் என்பதற்காகச் செய்திப் பத்திரிகையையும் தொலைக்காட்சி நிலையத்தையும் சில மாதங்களுக்கு முன்னால் தாக்கினார்கள். மும்பையில் பிஹார் தொழிலாளர்களைத் தாக்கி பாட்னாவுக்கு ரயிலேற வைத்தார்கள். தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது, கூடாது என்றே சிவசேனையினர் நினைக்கின்றனர்.
இந்த அராஜகப் போக்குக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாளை இதைவிட மோசமாக நடந்துகொண்டு நாட்டையே அவமானத்தில் அவர்கள் தள்ளிவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தொடர்ந்து வன்முறையிலும், மக்களில் ஒரு பிரிவினரை வெறுக்கும் செயல்களிலும் ஈடுபடுவோரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுடன் அத்தகைய அரசியல் கட்சிகளுக்கும் சட்டபூர்வமாக நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். சில உறுப்பினர்களைவிட, கட்சிகளைவிட இந்த நாடு பெரிது. தவறு செய்துவிட்டு அதற்காக வருந்தி மன்னிப்புகூட கேட்கத் தயாராக இல்லாதவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகப் பதவிவகிக்கும் தகுதியை அறவே இழந்துவிடுகிறார்கள்.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தது, 'நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம், வேலைவாய்ப்பைப் பெருக்குவோம், விலைவாசியைக் குறைப்போம்' என்றெல்லாம் அவர்கள் கூறிய வாக்குறுதிகளுக்காகத்தான். தவிர, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல், விரும்பியபடி சட்டத்தைத் தங்கள் கைகளில் அவர்கள் எடுத்துக்கொள்வதற்காக அல்ல என்பதை மறந்துவிட வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT