Published : 16 Jul 2014 09:27 AM
Last Updated : 16 Jul 2014 09:27 AM
உலகமே வேடிக்கை பார்க்க, பாலஸ்தீனத்தின் காஸா பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பின் ரகசிய நிலைகள்மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, இஸ்ரேல் ராணுவம் நடத்திய கணக்கற்ற வான் தாக்குதல்களில் அப்பாவிகள் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையிலான பலிகளின் எண்ணிக்கை இருநூறை நெருங்குகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தான். வழக்கம்போல, ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களைத் தாக்கியபோது, பொது மக்களும் சேர்ந்து உயிரிழக்க நேர்ந்துவிட்டதாக இஸ்ரேல் விளக்கம் தருகிறது.
காஸா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கான நிலப்பரப்பு மிகவும் குறுகியது. திட்டமிட்டு இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்திவரும் ஆக்கிரமிப்பு களால் தங்களுடைய பகுதி நிலத்தை இழந்துவரும் பாலஸ்தீனர்கள் வேறு வழியில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வசிக்கிறார்கள். அவர்களுக்காக ஆயுதமேந்திப் போராடும் ஹமாஸ் இயக்கமும் இடநெருக்கடி காரணமாகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே இருந்தபடி இஸ்ரேலியப் பகுதிகள் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குகிறது. இதுதான் உண்மை என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும், இதையெல்லாம் சாக்காக வைத்துக்கொண்டு, தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் சமரச உடன்பாடு ஏற்படும்வரையில் இந்தத் தாக்குதல்கள் தொடர்கதையாகத்தான் இருக்கப்போகின்றன. இஸ்ரேலோ ஆக்கிரமிப்பு மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனப் பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறது. உலக சமுதாயமும் வேடிக்கை பார்க்கிறது. குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் இறந்ததுகுறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நா-வின் ஆணையர் நவி பிள்ளை ஆழ்ந்த கவலை தெரிவித்திருக் கிறார். மனிதாபிமானம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசச் சட்டங்களை மீறும் வகையிலேயே இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் இருக்கின்றன என்று சற்றுக் கடுமையாகவே சாடியிருக்கிறார்.
இத்தகைய சூழலில், இந்திய அரசின் மவுனம் மனதை உறுத்துகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதை அரசின் கவனத்துக்கு நேற்று கொண்டுவந்தன. இன்றல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசு இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டிடமிருந்தும் சமதொலைவில் விலகியே நிற்க முயல்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட. மோடி தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டும். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை விரும்பும் இந்தியா, உண்மை தெரிந்தும் ஒதுங்கியிருக்கக் கூடாது. எங்கோ நடக்கும் ஒரு விஷயம் என்று இந்தியா இந்தப் பிரச்சினைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட முடியாது. பொருளாதாரரீதியாக இந்தியாவுக்கு முக்கியமான ஒரு பிராந்தியம் மேற்காசியா. அங்கே தொடர்ந்து அமைதியின்மை நிலவக் காரணம் பாலஸ்தீனப் பிரச்சினைதான். எனவே, அதை நீடிக்க விடாமல் சுமுகமாகத் தீர்த்துவைப்பதில் முக்கியப் பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT